உளவுத்துறை மூலம் அனைத்து துறைகளையும் முதல்வர் கண்காணிக்கிறார்: அமைச்சர் பேச்சால் பரபரப்பு

உளவுத்துறை மூலம் அனைத்து துறைகளையும் முதல்வர் கண்காணிக்கிறார்: அமைச்சர் பேச்சால் பரபரப்பு

அனைத்து துறைகளையும் உளவுத்துறை மூலம் முதல்வர் ஸ்டாலின் கண்காணிக்கிறார் என்று அரசு விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார்.

கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம்  இன்று நடந்தது. வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார்.

இதில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில் " அனைத்து அரசு துறைகளுக்கும் வருவாய்த்துறை தாய் துறையாக உள்ளது. கோடீஸ்வரன் முதல் ஏழை, எளியோர் இங்கே தான் வரவேண்டும். ஏழை, எளிய மக்களை எக்காரணம் கொண்டும் அலைக்கழிப்பு செய்யாமல் அவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

அனைத்து துறைகளையும் உளவுத்துறை மூலம் முதல்வர் கண்காணித்து வருகிறார். கடந்த ஆட்சி காலத்தில் பணியாளர் நியமனம் இன்றி நிலவும் பணியாளர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்.

இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் முதல்வருக்கு மிகவும் நெருக்கமான அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜியிடம் அதிகாரிகள் வேலை வாங்க வேண்டும். உங்கள் மாவட்டத்திற்கு என்ன தேவையோ அதை அவரிடத்தில் சொல்லி அமைச்சர், முதல்வரை சந்திக்கும் நேரத்தில் வற்புறுத்தி அதற்கான தேவைகளை நீங்கள் வாங்க வேண்டும்.

அந்த அளவுக்கு அமைச்சர் முதல்வரிடம் நெருக்கமாக உள்ளார். முதல்வரும் அமைச்சரிடம் நெருக்கமாக உள்ளார்" என்று பேசினார்.

வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டம் உள்பட பல்வேறு துறைகள் சார்பில் 111 பயனாளிகளுக்கு ரூ.23.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த், கலெக்டர் சமீரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in