‘முதல்வராக்குவதாகச் சொன்னோம்... முகங்கொடுத்துக்கூட பேசவில்லை!'

மாயாவதியின் புறக்கணிப்பு குறித்து மனம் திறந்த ராகுல்
‘முதல்வராக்குவதாகச் சொன்னோம்... முகங்கொடுத்துக்கூட பேசவில்லை!'

டெல்லியில் உள்ள ஜவாஹர் பவனில் நடந்த ‘தி தலித் ட்ரூத்’ எனும் புத்தகத்தை இன்று வெளியிட்டு உரையாற்றினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அப்போது அரசு நிறுவனங்கள் எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

“அரசு நிறுவனங்கள் மக்களாலோ, தேசத்தாலோ நிர்வகிக்கப்படவில்லை; ஆர்எஸ்எஸ் அமைப்பால் அவை பீடிக்கப்பட்டிருக்கின்றன. நிறுவனங்கள் இல்லாமல் அரசமைப்புச் சட்டம் அர்த்தமற்றது. இது புதிய தாக்குதல் அல்ல. மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட தருணத்திலிருந்தே தொடங்கிவிட்டது” என்று கூறிய ராகுல், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குறித்தும் பேசினார்.

நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவியது.

காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே களம் கண்டது. மொத்தம் உள்ள 403 பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி கிடைத்தது. 13 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றிருந்தாலும், 73 சதவீத வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

மறுபுறம், பிரியங்கா காந்தியின் சூறாவளிப் பிரச்சாரக் கூட்டங்கள் மூலம் இரட்டை இலக்கத்தையாவது தொடும் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு வெறும் இரண்டே இடங்களில்தான் வெற்றி கிடைத்தது. 2.5 சதவீத வாக்குகளைத்தான் அக்கட்சியால் பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 97 சதவீதம் பேர் டெபாசிட் இழந்தனர்.

இந்நிலையில், சிபிஐ, அமலாக்கத் துறை, பெகாசஸ் ஆகியவற்றின் மீதான அச்சத்தின் காரணமாகவே, தனித்துப் போட்டியிட்டு பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்துவிட்டதாகத் தனது உரையின்போது மாயாவதியின் மீது ராகுல் குற்றம்சாட்டினார்.

“உத்தர பிரதேசத் தேர்தலில், கூட்டணி அமைக்கலாம் என்றும், அவரே முதல்வர் பதவியில் அமரலாம் என்றும் மாயாவதிக்குத் தகவல் கொடுத்தோம். ஆனால், அவர் எங்களிடம் பேசக்கூட மறுத்துவிட்டார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.