ஒடிசாவின் கேபினட் அமைச்சர் அந்தஸ்து பெற்றார் தமிழர் வி.கே. பாண்டியன்... பட்நாயக்கின் அதிரடி வியூகம்!

நவீன் பட்நாயக் வி.கே.பாண்டியன்
நவீன் பட்நாயக் வி.கே.பாண்டியன்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வி.கே. பாண்டியன், தற்போது அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வி.கார்த்திகேய பாண்டியன் ஐஏஎஸ் தனது பணியிலிருந்து நேற்று விருப்ப ஓய்வு பெற்றார். மத்திய அரசு அவரது ஓய்வுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த சூழலில் அவர் அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சுரேந்திர குமார் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், "மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி(Transformational Initiatives) திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இந்த பதவி, கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவி. இனி, இவர் முதல்வருக்குக் கீழ் நேரடியாக பணியாற்றுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன், 2000ம் ஆண்டு பேட்ச் ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். 2002ம் ஆண்டு அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் அங்கு பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு முதல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகவும், அவரது வலது கரமாகவும் இருந்து வருகிறார்.

ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும், நவீன் பட்நாயக்குக்கு அடுத்த இடத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக கார்த்திகேய பாண்டியன் வலம் வருகிறார். கடந்த அக். 20ம் தேதி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்த அவருக்கு, நேற்று (அக்.23) மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

நவீன் பட்நாயக் வி.கே.பாண்டியன்
நவீன் பட்நாயக் வி.கே.பாண்டியன்

நவீன் பட்நாயக்கின் ஆலோசனையின் பேரிலேயே அவர் விருப்ப ஓய்வு பெற்றதாகவும், விரைவில் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒடிசா சட்டமன்றத் தேர்தலிலும் அவர் களமிறங்கலாம் என்றும், பிஜு ஜனதா தளம் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் பலரும் கருதுகின்றனர். சமீபத்தில் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை சந்தித்த போது கூட மூன்றாவது நபராக பாண்டியன் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாண்டியனின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி சப்தகிரி உலகா, அடுத்த தேர்தலுக்கு முன்பு ஒடிசாவின் முதல்வராக பாண்டியன் பதவியேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியுள்ளார். அரசியலில் இறங்குவதற்காகவே பாண்டியன் தனது பணியை ராஜினாமா செய்துள்ளதாக ஒடிசா பாஜக தலைமைக் கொறடா மோகன் மஜி தெரிவித்துள்ளார். "இப்போது, அவரால் ஐஏஎஸ் முகமூடியுடன் இல்லாமல் வெளிப்படையாக அரசியல் செய்ய முடியும். ஆனால் அவரை ஒடிசா மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in