உறவினருக்கு ஆறுதல் கூற சென்ற ஓபிஎஸ் அதே மருத்துவமனையில் அனுமதி!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்க்கச் சென்ற ஓபிஎஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது ஓபிஎஸ்-க்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக உட்கட்சி பிரச்சினையில் மிகவும் பரபரப்பாக இருந்து வந்த ஓபிஎஸ், சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினர் ஒருவரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நேற்று இரவு அந்த மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அங்கு அவரை சந்தித்த மருத்துவர்களிடம் தனக்கு இரண்டு நாட்களாக லேசான மயக்கம், உடல் வலியுடன் காய்ச்சல் இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கேயே அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று தீவிரமாக இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுவது நல்லது என அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறினர். அதனையடுத்து அவர் உடனடியாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் பலருக்கும் நோய்த்தொற்றை உருவாக்கியுள்ளது. அதில் கலந்து கொண்ட ஈபிஸ் உதவியாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது ஓபிஎஸ்-க்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in