சி.வி.சண்முகம் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் சி.வி.சண்முகம் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவு

காவல்துறை பாதுகாப்பு கோரிய அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்தின் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான சி.வி.சண்முகம் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அன்று, தன் வீட்டில் நுழைந்த மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில், தனது மைத்துனர் கொல்லப்பட்டதாகவும், அதன்பின் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், தனது துப்பாக்கி உரிமத்தையும் புதுப்பித்து தரவில்லை எனவும் கூறியுள்ளார்.

தற்போது 2006-ல் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கு சாட்சி விசாரணை கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதாகவும், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை கூறக் கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதமும், கடந்த ஆண்டு ஜனவரி மாதமும் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, கொலை தொடர்பான வழக்கின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சி.வி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன் ஆஜராகி, பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மனு கொடுத்து ஓராண்டுக்கு  மேலாகியும் பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, பாதுகாப்பு கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in