மத்திய அரசின் இணையப் பாதுகாப்பு நிறுவனமான ’இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு’(CERT-In), எதிர்க்கட்சியினரின் ஐபோன் ஹேக்கிங் புகார்கள் தொடர்பாக தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும் இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் இன்று( நவ.2) இதனை தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்ட எச்சரிக்கையைப் பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். அதில் ‘அரசு ஆதரவுடன் தாக்குதல் நடத்துபவர்கள் தங்கள் ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிக்கிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
அத்தகைய அறிவிப்புகளைப் பெற்றவர்களில் காங்கிரஸ் கட்சியினர் அதிகம் இருந்தனர். கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவில் தொடங்கி சசி தரூர், பவன் கேரா, கே.சி.வேணுகோபால், பூபிந்தர் ஹூடா உள்ளிட்டோர் அதில் அடங்குவார்கள். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா (உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி என இதர கட்சிகளின் தலைவர்களும் இதில் அடங்குவார்கள்.
ஐபோன் ஹேக்கிங் புகார் தொடர்பாக யெச்சூரி, சதுர்வேதி ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மஹுவா மொய்த்ரா மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் உரிய நடவடிக்கை கோரி புகார் கடிதம் அளித்தார்.
இதனையடுத்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ’ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பதையும், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தல் அறிவிப்புகள் அனுப்பப்பட்டது ஏன் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று அரசாங்கம் சார்பில் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்தே ஐடி அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், ஆப்பிள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை இன்று உறுதிப்படுத்தினார். மேலும் எதிர்க்கட்சிகளின் புகார்கள் தொடர்பான விசாரணை தொடங்கியிருப்பதையும் அவர் உறுதி செய்தார்.
இதையும் வாசிக்கலாமே...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!
ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!
பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!
விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!