‘இதில் எங்கே அரசியல் இருக்கிறது?’ - இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டது பற்றி நிதீஷ்

‘இதில் எங்கே அரசியல் இருக்கிறது?’ - இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டது பற்றி நிதீஷ்

பிஹார் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில், தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்த இஃப்தார் விருந்தில், அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் கலந்துகொண்டது பரபரப்பைக் கிளப்பியது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அக்கட்சியின் இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டதால், அரசியல் களத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் எனும் ஊகங்களும் எழுந்தன.

கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கும், நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் இடையே சாதிவாரிக் கணக்கெடுப்பு, மதுவிலக்கு, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எனப் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தகைய சூழலில், இந்த விருந்தில் அவர் கலந்துகொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்நிலையில், இந்த ஊகங்களுக்கு இன்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்திருக்கிறார் நிதீஷ்.

கடந்தகால வரலாறு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி. 2013-ல், பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்து அந்தக் கூட்டணியைவிட்டு வெளியேறினார் நிதீஷ்.

2015 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், சமாஜ்வாதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உருவாக்கிய மகா கூட்டணி (மகாகட்பந்தன்) வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. நிதீஷ் குமார் முதல்வரானார். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார். அந்தத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துக்குக் கிடைத்தது 71 இடங்கள்தான். ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 இடங்களில் வென்றிருந்த நிலையில் கூட்டணியில் அக்கட்சியின் ஆதிக்கம்தான் இருந்தது. இதனால்தான் தேஜஸ்வி யாதவுக்குத் துணை முதல்வர் பதவி என்பன போன்ற சமரசங்களைச் செய்ய வேண்டி வந்தது. ஒரு கட்டத்தில் லாலு குடும்பத்தின் ஆதிக்கம் அதிகரிப்பதாகக் கருதிய நிதீஷ், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றிப் பேசத் தொடங்கினார். இறுதியாக மகா கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜக துணையுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார்.

எனினும், ஐக்கிய ஜனதா தளத்தை வலுவிழக்கச் செய்வதில் தீவிரமாக இருந்த பாஜக, 2020 சட்டப்பேரவைத் தேர்தலில், சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியை வைத்து ஒரு அரசியல் சதுரங்கம் ஆடியது. அந்தத் தேர்தலில், 115 இடங்களில் போட்டியிட்டு 43 இடங்களில் மட்டுமே வென்றது ஐக்கிய ஜனதா தளம். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (75), பாஜக (74) ஆகிய கட்சிகளுக்குப் பின்னே மூன்றாவது இடம் அக்கட்சிக்குக் கிடைத்தது. முதல்வர் பதவியை நிதீஷ் குமாருக்கு பாஜக விட்டுக்கொடுத்துவிட்டாலும், கடும் அழுத்தத்துடன்தான் அவர் ஆட்சிசெய்துவருகிறார்.

இந்தச் சூழலில், தேஜஸ்வி ஏற்பாடு செய்த இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டது குறித்து எழுந்த கேள்விகளுக்கு இன்று பதிலளித்த நிதீஷ் குமார், “இதில் அரசியலுக்கு என்ன வேலை இருக்கிறது? இதுமாதிரியான இஃப்தார் விருந்துகளில் எல்லோருக்கும்தான் அழைப்பு விடுக்கப்படுகிறது. எல்லா கட்சிகளும் இப்படியான விருந்துகளை நடத்துகின்றன” என்று கூறிவிட்டார். இதையடுத்து இதுதொடர்பாக எழுந்த ஊகங்கள் ஒருவழியாக அடங்கியிருக்கின்றன.

இந்த விருந்தில் பாஜகவைச் சேர்ந்த அவதேஷ் நாராயண் சிங், சையது ஷாநவாஸ் ஹுசைன், சிராக் பாஸ்வான் உள்ளிட்டோரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in