
தமிழகத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது போன்ற நிலையை சமூக வலைதளங்களின் மூலம் சில சமூக விரோதிகள் உருவாக்கி வருகின்றனர் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கலையரங்கம் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’எனது சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்த கல்லூரியில் அடிக்கல் நாட்டும் விழாவை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது-
வட மாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். ஆனால், சில சமூக விரோதிகள் சமூக வலைதளங்கள் மூலமாக பொய்யான பிரச்சாரத்தை முன் வைத்து வருகிறார்கள். கொரோனா காலக்கட்டத்தின் போது ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அவர்களது மாநிலத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தோம்.
தமிழகத்தில் மட்டும் தான் வட மாநிலத்தவர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். முதலமைச்சரின் பிறந்த நாளில் வட மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்களும் பாராட்டுகிறார்களே என்ற பொறாமையில் பொய்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். அனைவருக்கும் பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது’’ என்றார்.