
வடமாநில தொழிலாளர் பிரச்சினையில் வதந்தி பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் போலி வீடியோக்கள் பரப்பப்பட்டன. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இவ்விஷயத்தில் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். தமிழக காவல் துறையும் இவ்விஷயத்தில் கடும் எச்சரிக்கையை விடுத்திருந்தது.
இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வதந்தி பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல், மத ரீதியான பிரிவினையை ஏற்படுத்துதல், இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.