அசைவ உணவு தனிமனித உரிமை!

ஏபிவிபி அமைப்புக்கு சீமான் கண்டனம்
அசைவ உணவு தனிமனித உரிமை!

டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு சாப்பிட்டதற்காக, மாணவர்கள் மீது அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடும் தாக்குதல் தொடுத்திட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உணவு எனும் தனிமனித உரிமையில் தலையிட்டு, அதற்காகத் தாக்குதல் தொடுத்திருக்கிற ஏபிவிபியைச் சேர்ந்தவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ உணவு, உடை, வழிபாடு போன்றவையெல்லாம் தனிமனித விருப்பங்களைச் சார்ந்தவையாகும். அவற்றை மறுத்து, இடையூறு செய்வதும், அதனைக் காரணமாகக் காட்டி வன்முறைக்கு வித்திடுவதுமான மதவெறிச்செயல்கள் எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. இவையாவும் இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளையே மறுக்கும் மனித உரிமை மீறலாகும். பாஜகவின் ஆட்சியதிகாரம் தொடங்கப்பட்டக் காலத்திலிருந்து, இதுபோன்ற மோதல்களும், தாக்குதல்களும் இந்தியப் பெருநிலம் முழுமைக்கும் அதிகரித்து வருவது நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் கீழானச் செயல்களாகும்” என்றும் கூறியுள்ளார்.

“ ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு உண்டதற்காக தாக்குதல் தொடுத்திட்ட ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது கல்லூரி நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in