வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை; பிரச்சாரத்துக்கு தயாராகும் தலைவர்கள்!

ஓபிஎஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின்,  ஈபிஎஸ் பிரச்சாரம்
ஓபிஎஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் பிரச்சாரம்hindu கோப்பு படம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இன்று மனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சார தேதியை அறிவித்துள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டாலும், தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று மட்டும் 27 ஆயிரம் பேர் வரை வேட்புமனுத் தாக்கல் செய்ததாக, தோ்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தலில் மொத்தம் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வார்டு வாரியாக இந்தப் பணி நடக்கிறது. வேட்புமனு பரிசீலனையின்போது வேட்பாளர், முன்மொழிபவர் அல்லது வேட்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட நபர் என யாராவது ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுவை வாபஸ் பெற வரும் 7-ம் தேதி கடைசிநாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணிவரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். மாலை 3 மணிக்குப் பிறகு, தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதனிடையே, அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது பிரச்சாரப் பயணத்தை அறிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் நாளை காணொலி மூலமாகவும், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் நேரிடையாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். இதேபோல் மற்ற தலைவர்களும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in