
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எந்த பிளவும் இல்லை என்று அக்கட்சியின் சரத் பவார், அஜித் பவார் தலைமையிலான இரண்டு அணிகளும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
தேசியவாத காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவரான அஜித்பவார் கடந்த ஜூலை மாதம் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணி அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். அஜித்பவாரின் இந்த அதிரடி முடிவை கட்சியின் தலைவர் சரத்பவார் ஏற்கவில்லை. இந்த நிலையில் கட்சி யாருக்கு சொந்தம் என்ற உரிமை பிரச்சினை எழுந்தது. கட்சி பெயர் மற்றும் கட்சியின் சின்னத்தை உரிமைக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு அஜித்பவார் தரப்பு கடிதம் எழுதியது. இதனால் கட்சி இப்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கட்சியில் எந்த பிளவும் இல்லை, சிலர் தங்களது சொந்த காரணங்களுக்காக கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர் என்று சமீபத்தில் சரத்பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது. ஆனால் சரத்பவாரின் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்த நிலையில் அஜித்பவார் தரப்பும் தற்போது தேர்தல் ஆணையத்திற்கு பதில் அனுப்பி உள்ளது. அதில், கட்சியில் எந்த பிளவும் இல்லை, கட்சியின் தேசிய தலைவராக அஜித்பவார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் அடுத்த மாதம் அக்டோபர் 6-ம் தேதி இரு தரப்பிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இதன் பின்னர் தேர்தல் ஆணையம் கட்சி பெயர், சின்னத்தை எந்த அணியிடம் ஒப்படைப்பது என்பது பற்றி முடிவு எடுக்கும்.