துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு எப்போது?

திராவிட மண்ணில் மறுக்கப்படுகிறதா சமூக நீதி?
துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு எப்போது?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்ட நிலையில், வரும் டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் ஆயத்தமாகிவருகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், உள்ளாட்சி நிர்வாகத்தில் நீண்ட காலமாகக் கிடப்பில் கிடக்கும் ‘இடஒதுக்கீடு’ கோரிக்கையை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தூசுதட்டுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது!

இடஒதுக்கீட்டின் தாத்பரியமே எல்லா மட்டங்களிலும் அது இருக்க வேண்டும் என்பதுதான். இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனம் அங்கீகரித்த ஒன்று. தனியார் நிறுவனங்களில்கூட இடஒதுக்கீடு தேவை என்று கேட்கும் இந்தக் காலகட்டத்தில்தான், ஆயிரக்கணக்கான அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு இல்லாத அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதுவும், சமூக நீதியின் தாயகம் என்று மார்தட்டிக்கொள்ளும் தமிழகத்தில்தான் இந்த நிலை. இந்த அவலம், சத்தம் இல்லாமல் அரங்கேறிக்கொண்டிருப்பது உள்ளாட்சிப் பதவிகளில்தான்.

முரண்கள்

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கென இடஒதுக்கீடு உள்ளதைப் போலவே, உள்ளாட்சி அமைப்புகளிலும் உண்டு. கூடுதலாக, மகளிருக்கும் உண்டு. உள்ளாட்சி அமைப்புகளில் உச்சபட்ச பதவியான மேயர் தொடங்கி பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் அடிநாதமான கிராம ஊராட்சித் தலைவர் பதவி, கவுன்சிலர்கள் என எல்லாப் பதவிகளிலும் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால், துணை மேயர் தொடங்கி கிராம ஊராட்சித் துணைத் தலைவர் பதவிவரை இடஒதுக்கீடு முறை தமிழகத்தில் இல்லை என்பதுதான் அதிர்ச்சி நிலை. தமிழகத்தில் தற்போது 12,525 கிராம ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், சென்னை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் தவிர்த்து 36 மாவட்ட ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள், 121 நகராட்சிகள், 15 மாநகராட்சிகள் உள்ளன. இதில் கிராம ஊராட்சி தொடங்கி மாநகராட்சி வரை எல்லா மட்டங்களிலும் துணைத் தலைவர், துணை மேயர் பதவிகள் உள்ளன.

மேயர், தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நேரடியாகவோ (மக்கள் வாக்களிப்பது) அல்லது மறைமுகமாகவோ (வார்டு கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுப்பது) என எப்படி நடைபெற்றாலும் இடஒதுக்கீடு உண்டு. துணைத் தலைவர்கள், துணை மேயர்கள் பொறுப்பு என்பது எப்போதுமே மறைமுகத் தேர்தல்தான். ஆனால், இந்தப் பதவிகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு இல்லை. இத்தனைக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துவதைப் போலவே, இந்தப் பதவிகளை நிரப்புவதற்கான மறைமுகத் தேர்தலையும் மாநிலத் தேர்தல் ஆணையமே நடத்துகிறது என்பதுதான் இதில் விநோதம்.

ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்ற சில மாநிலங்கள் துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தியுள்ளன. ஒடிசாவில் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார்கள். மாநகராட்சியில் அமைக்கப்படும் நிலைக்குழுக்களிலும்கூட இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தைக் கொண்டுவந்துவிட்டனர்.

முன்னுதாரணமான மாநிலங்கள்

பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, தமிழகத்தில் முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 1996-ல் நடைபெற்றது. அதற்குப் பிறகான காலம் முதலே துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு இல்லை என்கிறார்கள். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில், தேர்தல் முறையை மாநில அரசுகளே தீர்மானித்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில், இந்தியாவில் மாநிலங்கள் ஒவ்வொரு விதமாகச் செயல்படுகின்றன.

உதாரணமாக, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்ற சில மாநிலங்கள் துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தியுள்ளன. ஒடிசாவில் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார்கள். மாநகராட்சியில் அமைக்கப்படும் நிலைக்குழுக்களிலும்கூட இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தைக் கொண்டுவந்துவிட்டனர். ஆனால், இதில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டிய தமிழகம், இதைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்.

பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்

இந்தப் பதவிகளுக்கும் இடஒதுக்கீடு கோரி, கடந்த 2012-ம் ஆண்டிலேயே இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், “உள்ளாட்சி அமைப்புகளில் துணை மேயர், நகராட்சிகளில் துணைத் தலைவர், கிராமப் பஞ்சாயத்துகளில் துணைத் தலைவர் போன்ற மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் கொண்டுவரலாம்” என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

தமிழகத்தில் 2011-ம் ஆண்டிலேயே உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளும் நிரப்பப்பட்டுவிட்டன. எனவே, நீதிமன்ற அறிவுறுத்தல்படி இந்தச் சட்டத்தை உடனே கொண்டுவருவதில் சட்டச் சிக்கல் இருந்திருக்கலாம். அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் சட்டம் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், 2016-ல் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் 2019-ல் தான் நடைபெற்றது. அப்போதும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவது பற்றி தமிழக அரசு முயற்சிக்கவில்லை. இதற்கிடையே, 2016-ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்றத்தை அணுகியது குறிப்பிடத்தக்கது!

செ.கு.தமிழரசன்
செ.கு.தமிழரசன்

சமூகநீதிக்கு எதிரானது!’

இதுதொடர்பாக செ.கு.தமிழரசனிடம் பேசினோம். “2019-ல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோதே, இந்த அம்சத்தைக் குறிப்பிட்டு தேர்தலுக்குத் தடை கோரி நீதிமன்றத்தை அணுகினோம். ஆனால், அப்போது தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டது என்பதைக் காரணமாகச் சொன்னார்கள். நீதிமன்றமும், இதை அரசாங்கத்திடம் சொல்கிறோம் என்று சொன்னதோடு, தேர்தலுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்தப் பதவிகளுக்கு இடஒதுக்கீடு மறுப்பது சமூகநீதிக்கே எதிரானது. நேரடியாகவோ மறைமுகமாகவோ வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்படும் எந்த அரசு அமைப்புகளுக்கான பதவிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கியே ஆக வேண்டும்.

ஆனால், மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் முறை (Pattern of the election to state authority) என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு மறுக்கிறார்கள். இது வேறு. சமூகநீதி என்பது வேறு. இதில், தேர்தல் நடத்தும் வழிகாட்டு முறை என்று சொல்லி இடஒதுக்கீடு மறுப்பது என்ன நியாயம்? உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் அல்லது மேயர் பதவிகளை வார்டு கவுன்சிலர்கள்தான் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். அதே கவுன்சிலர்கள்தான் துணைத் தலைவர் அல்லது துணை மேயரையும் தேந்தெடுக்கப்போகிறார்கள். மேயர், தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு அளித்துவிட்டு, துணைமேயர், துணை தலைவர் பதவிகளுக்கு மட்டும் எப்படி மறுக்க முடியும்? புதிய அரசுக்கு இந்தப் பிரச்சினை போய்ச் சேரவில்லை என்று நினைக்கிறேன். எங்களைப் போன்றவர்களின் கோரிக்கையை மாநில அரசு காதில் வாங்கிக்கொண்டு நிறைவேற்ற வேண்டும்” என்றார் செ.கு.தமிழரசன்.

இது வெறுமனே பட்டியலின, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு கேட்கும் பிரச்சினை மட்டுமல்ல. துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீடு முறையைக் கொண்டுவந்தால், அந்த மக்கள் மட்டுமல்ல, இடஒதுக்கீட்டால் பயன்பெறும் அனைத்து சமூகத்தினரும் அந்தப் பதவிகளில் சட்டரீதியாக அமரும் வாய்ப்புக் கிடைக்கும்.

திமுக அரசு கவனிக்குமா?

இது வெறுமனே பட்டியலின, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு கேட்கும் பிரச்சினை மட்டுமல்ல. துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீடு முறையைக் கொண்டுவந்தால், அந்த மக்கள் மட்டுமல்ல, இடஒதுக்கீட்டால் பயன்பெறும் அனைத்து சமூகத்தினரும் அந்தப் பதவிகளில் சட்டரீதியாக அமரும் வாய்ப்புக் கிடைக்கும். தமிழகத்தைக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் சமூகநீதியை உரக்கப் பேசும் இயக்கங்களாக அறியப்பட்டவை. சமூகநீதியில் ஆழமான நம்பிக்கையும் அதில் உறுதியும் உள்ள தமிழக அரசு, இந்த விவகாரத்தைக் கையில் எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in