3 முறைகேடு வழக்குகளிலும் முன்ஜாமீன் தள்ளுபடி... சந்திரபாபு நாயுடுவுக்கு தொடரும் சிக்கல்

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

திறன் வளர்ப்பு திட்ட முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவிற்கு வேறு 3 வழக்குகளில் முன்ஜாமீன் வழங்க ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது பதவிக்காலத்தின் போது திறன் வளர்ப்பு திட்டத்தில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியினர் கட்சி அலுவலகத்தில் மின்விளக்குகளை அணைத்து விட்டு, அகல்விளக்குகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் சந்திரபாபு நாயுடுவின் மகனும் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் தலைமையில் டெல்லியில் அக்கட்சியினர் 2 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

 சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்வட்டசாலை முறைகேடு, சைபர் கேபிள்கள் அமைப்பதில் முறைகேடு மற்றும் அங்காலூ 307 ஆகிய 3 வழக்குகளில் அவரை கைது செய்ய மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து இந்த 3 வழக்குகளிலும் முன்ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 வழக்கிலும் அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவை எந்த நேரத்திலும் போலீஸார் பிற வழக்குகளின் கீழ் கைது செய்யலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. முன்னதாக ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனு, அக்டோபர் மாதம் 9ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in