மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கேராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் கேள்விக்கே இடமில்லை: மல்லிகார்ஜுன கார்கே பதிலடி

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் கேள்விக்கே இடமில்லை: மல்லிகார்ஜுன கார்கே பதிலடி

இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியதாக லண்டனில் கூறியதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ராகுல் காந்தி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் கேள்விக்கே இடமில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைப்பவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். மோடிஜி ஐந்தாறு நாடுகளுக்குச் சென்று நம் நாட்டு மக்களை அவமானப்படுத்தியதும், இந்தியாவில் பிறந்ததே பாவம் என்று அவர் கூறியதும் என்ன?. உண்மையிலேயே இந்தியாவில் ஜனநாயகம் குறைந்து வருகிறது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பலவீனமடைந்து வருகிறது. டிவி சேனல்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றன, உண்மையைப் பேசுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இது ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் செயல்முறை இல்லையென்றால், வேறு என்ன? எனவே, மன்னிப்பு கேட்கும் கேள்விக்கே இடமில்லை" என்று கூறினார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சமீபத்தில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையில் பேசுகையில், இந்திய ஜனநாயகம் அழுத்தம் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய ஜனநாயகத்தின் கட்டமைப்புகள் முழுமையானத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவதூறாகப் பேசுவதாகவும், வெளிநாடுகளின் தலையீட்டை நாடுவதாகவும் பாஜக குற்றம்சாட்டியது.

டெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்மிருதி இரானி, "ராகுல் காந்தி வெளிநாட்டு மண்ணில் தேசத்தை அவமதித்தார். உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை அவர் அவமதித்தார். இந்தியாவை அவமானப்படுத்துவதுதான் ஜனநாயகமா?. இந்தியாவிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in