அரசியல் தலைவர்களின் படங்கள் இருக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரசியல் தலைவர்களின் படங்கள் இருக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஊராட்சித் தலைவர்களின் அலுவல் ரீதியான தகவல் தொடர்புகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் இருக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் ஏ.புதுப்பட்டியை சேர்ந்த கே.குருநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "அழகாபுரி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.புதுப்பட்டியில் வசிக்கிறேன். நான் வசிக்கும் வீடு தாத்தாவுக்கு சொந்தமானது. அந்த வீடு உயில் மூலம் என் தகப்பானருக்கு வந்தது. என் தகப்பனார் அந்த வீட்டை எனக்கு தானமாக வழங்கினார். வீட்டுக்கான பட்டா தந்தை பெயரில் உள்ளது வீட்டு வரி ரசீதும் என் பெயரில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் என் வீட்டுக்கு என் சித்தப்பா பெயருக்கு வீட்டு வரி ரசீது வழங்கப்பட்டது. அதை வைத்து சித்தப்பா உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் எனக்கு சம்மன் வந்தது. என் பெயருக்கு வீட்டு வரி ரசீது வழங்க அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார். ஆனால், உரிமையியல் வழக்கு நிலுவையில் இருப்பதால் என் பெயரில் வீட்டு வரி ரசீது வழங்க முடியாது ஊராட்சித் தலைவர் 11.7.2022-ல் கடிதம் அனுப்பினார். அதை ரத்து செய்து என் பெயரில் வீட்டு வரி ரசீது வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி என்.நிர்மல்குமார் விசாரித்தார். மனுதாரருக்கு ஊராட்சித் தலைவர் அனுப்பிய கடிதம் நீதிபதியிடம் வழங்கப்பட்டது. அதில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரின் புகைப்படங்கள் இருந்தது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "அரசியல்சார்பு இல்லாமல் சட்டத்தை பின்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதேபோல் எதிர்காலத்தில் ஊராட்சித் தலைவர்கள் அல்லது பொதுப்பணிகளில் உள்ளவர்கள் தனது அலுவலக தகவல்கள், மக்களுக்கு அனுப்பும் தகவல்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த கிராம ஊராட்சிகள் உதவி இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர் பெயருக்கு வீட்டு வரி ரசீது வழங்கி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in