மேகாலயாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை: திரிபுராவில் தொடரும் மல்லுக்கட்டு

கான்ராட் சங்மா
கான்ராட் சங்மா மேகாலயாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை: திரிபுராவில் தொடரும் மல்லுக்கட்டு

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் மேகாலயாவில் இதுவரை எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அங்கே ஆளும் தேசிய மக்கள் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

60 இடங்களைக் கொண்ட மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தற்போதைய சூழலில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, மேலும் 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதற்கு அடுத்ததாக தேசிய ஜனநாயக கட்சி எனப்படும் யுடிபி 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மேலும், திரிணமூல் காங்கிரஸ் 5 இடங்களிலும், வாய்ஸ் ஆப் தி பீப்பிள் பார்ட்டி 5 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், பிடிஎப் 2 தொகுதிகளிலும், ஹில் ஸ்டேட் பீப்பிள் டெமாக்கரட்டிக் பார்ட்டி 2 தொகுதிகளிலும், சுயேட்சைகள் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். மேகாலயாவில் இதுவரை பெரும்பான்மைக்குத் தேவையான 31 இடங்களை எந்தக் கட்சியும் பெறாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே அதிக இடங்களைப் பெற்றுள்ள தற்போதைய முதல்வர் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சியமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திரிபுராவில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 33 இடங்களிலும், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 15 இடங்களிலும், திப்ரா மோதா கட்சி 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. திரிபுராவில் பெரும்பான்மைக்குத் தேவையான 31 என்ற எண்ணிக்கையிலேயே பாஜக தொடர்ந்து ஊசலாட்டத்தில் இருந்து வருகிறது.

அதேபோல 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ காஜெட்டோ கினிமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் என்டிபிபி-பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும், என்பிஎப் 3 தொகுதிகளிலும், மற்றவர்கள் 17 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். நாகாலாந்தில் ஆளும் என்டிபிபி-பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிப்பதால் அக்கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in