'எனது குரலை யாரும் அடக்க முடியாது': பாஜகவிற்கு டெல்லி மகளிர் ஆணையத்தலைவி எச்சரிக்கை

ஸ்வாதி மாலிவால்
ஸ்வாதி மாலிவால்

டெல்லியில் மகளிர் ஆணையத்தலைவர் ஸ்வாதி மாலிவால் நடத்தியது ஒரு போலி ஸ்டிங் ஆபரேஷன் என்று பாஜக விமர்சித்துள்ளது. எனது குரலை யாரும் அடக்க முடியாது என்று பாஜகவுக்கு ஸ்வாதி மாலிவால் பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவராக இருப்பவர் ஸ்வாதி மாலிவால். இவர் அண்மையில் தனது ட்விட்டரில் "டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, போதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அப்போது காரில் இருந்து தப்பிக்க முயன்ற அவரைப் பிடிக்க முற்பட்டபோது எனது கை அந்த காரின் ஜன்னல் கதவில்மாட்டிக் கொண்டது. இதையடுத்து,காருடன் 10-15 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். மகளிர் ஆணையத் தலைவிக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மற்ற பெண்கள் எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்பதை கற்பனை செய்து பார்க்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். இவரது புகாரின் அடிப்படையில் கார் ஓட்டுநர் ஹரிஷ் சந்திரா கைது செய்யப்பட்டார்.

ஸ்வாதி மாலிவாலின் இந்த பரபரப்பான புகாரை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. "இந்தச் சம்பவமே போலி ஸ்டிங் ஆபரேஷன். டெல்லி போலீஸாரை மோசமாக அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இவ்வாறு செய்துள்ளார்" என்று பாஜக விமர்சித்துள்ளது.

இதற்குப் பதிலடி தரும் வகையில் ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னைப் பற்றி அவதூறுகளை, கேவலமான பொய்களை உரைப்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன். இந்த பொய்களால் நான் அஞ்சிவிடமாட்டேன். எனது குறுகிய காலத்தில் நான் நிறைய பெரிய வேலைகளை செய்துள்ளேன். நான் பலமுறை இதுபோன்று விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். ஆனால், இவை எல்லாம் என்னைத் தடுக்காது. ஒவ்வொரு முறை நான் இவ்வாறான தாக்குதலுக்கு உள்ளாகும் போதும் அது என் உள்ளே உள்ள நெருப்பை இன்னும் வலிமையாக்கியுள்ளது. எனது குரலை யாரும் அடக்க முடியாது. நான் தொடர்ந்து போராடுவேன். என் உயிர் உள்ளவரை அது தொடரும்" என்று பதிவிட்டுள்ளார். பாஜகவிற்கு எதிரான அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in