‘குஜராத் பால விபத்துக்கு ஒருவரும் மன்னிப்பு கேட்காததற்கு பாஜகவின் ஆணவம்தான் காரணம்’ - ப.சிதம்பரம் தாக்கு

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

குஜராத்தில் 135 உயிர்களை பலிகொண்ட மோர்பி பாலம் இடிந்து விழுந்த சோகத்திற்கு இதுவரை யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. இது பாஜகவின் ஆணவம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக தாக்கியுள்ளார்.

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக அகமதாபாத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ப.சிதம்பரம், “எனக்குத் தெரிந்தவரை இவ்வளவு பெரிய மோர்பி பால விபத்து சோகத்திற்கு குஜராத் அரசின் சார்பில் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை, யாரும் ராஜினாமா செய்யவில்லை. இதற்கு பாஜகவின் திமிர்தான் காரணம். வெளிநாட்டில் இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால், உடனடியாக ராஜினாமா செய்திருப்பார்கள். வரும் தேர்தலில் தாங்கள் எளிதில் வெற்றி பெறுவோம் என்று இங்குள்ள அரசாங்கம் நினைப்பதால் அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை. அதனால் இந்த சோக சம்பவத்தினை அவர்கள் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை" என்று கூறினார்.

மேலும், “ஆளும் அரசாங்கத்தை மக்கள் தோற்கடிக்கும் மாநிலங்களில், அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே இந்த ஆட்சியை மாற்றி காங்கிரஸுக்கு வாய்ப்பு அளிக்குமாறு குஜராத் மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று அவர் கூறினார்.

அக்டோபர் 30 அன்று, குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றில் உள்ள தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர்.

சிபிஐ மற்றும் இடி போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், "அவர்கள் பாஜகவின் கைக்கூலிகள். அவர்கள் செய்யும் கைதுகளில் தொண்ணூற்றைந்து சதவீதம் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள்" என்று கூறினார். பொது சிவில் சட்டத்தை மாநிலங்களால் அமல்படுத்த முடியாது என்பது ஒரு குழந்தைக்கு கூட தெரியும், அதை பாராளுமன்றத்தால்தான் செய்ய முடியும். ஆனாலும் பல மாநிலங்களில் இதை பாஜக தேர்தல் வாக்குறுதியாக அளித்து வருகிறது. குஜராத் மாநிலம் முதல்வரால் இயக்கப்படவில்லை, டெல்லியிலிருந்து இயக்கப்படுகிறது என்று அவர் கூறினார்

குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்று, டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in