‘மக்களை கால்களில் விழ வைக்காதீர்கள்’ - அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தேஜஸ்வி யாதவ்!

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

மாநில ஆர்ஜேடி அமைச்சர்கள் தங்களுக்கு புதிய வாகனம் வாங்க வேண்டாம் என்றும், தங்களை விட வயது முதிர்ந்தவர்கள் கால்களில் விழுவதை அனுமதிக்கக்கூடாது எனவும் பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

பிஹாரின் புதிய அமைச்சரவையில் செவ்வாயன்று மொத்தம் 31 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் ஆர்ஜேடியைச் சேர்ந்த 16 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

ஆர்ஜேடி அமைச்சர்களுக்கு தேஜஸ்வி யாதவ் வழங்கியுள்ள அறிவுரையில், “ ராஷ்டிரிய ஜனதா தளத்தின் அமைச்சர்கள் தங்களுக்கு புதிய வாகனம் எதுவும் வாங்கக்கூடாது. தன்னை விட மூத்தவர்கள் யாரையும் தங்கள் கால்களைத் தொட அனுமதிக்கக் கூடாது. மரியாதை மற்றும் வாழ்த்துக்களுக்காக கூப்பிய கைகளுடன் வணக்கம், நமஸ்தே என சொல்வதை ஊக்குவிக்க வேண்டும். ஏழை மக்களுக்கு அவர்களின் சாதி மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் உதவ வேண்டும்.

பூங்கொத்துகளை பரிசாக வழங்குவதற்கு பதிலாக பேனா அல்லது புத்தகங்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். அனைத்து துறை பணிகளிலும் நேர்மை, வெளிப்படைத்தன்மை, விரைவு மற்றும் உடனடி அமலாக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்

ஆறாவது மற்றும் இறுதி வேண்டுகோளாக, “முதலமைச்சர், அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் தங்கள் துறைகளின் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். இதனால் பொதுமக்கள் நமது ஒவ்வொரு முயற்சியையும் பற்றிய நேர்மறையான தகவலைப் பெற முடியும்." என தெரிவித்துள்ளார்.

பிஹாரில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்ஜேடி மீண்டும் பொறுப்பிற்கு வந்துள்ள நிலையில், குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி அமைச்சர்கள் பணியாற்ற வேண்டும் என அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in