ஓபிசி இடஒதுக்கீடு இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது: நீதிமன்றம் தடையால் யோகி ஆதித்யநாத் அரசுக்கு பின்னடைவு

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தரபிரதேச மாநில அரசின் வரைவு அறிவிப்பை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு , ஓபிசியினருக்கு இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என உத்தரவிட்டது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு டிசம்பர் 5-ம் தேதி வெளியிட்ட வரைவு அறிவிப்பை நீதிபதி டி.கே.உபாத்யாய் மற்றும் நீதிபதி சவுரவ் லாவானியா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்தது.

உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட டிரிபிள் டெஸ்ட் ஃபார்முலாவைப் பின்பற்றாமல் ஓபிசி இடஒதுக்கீடு வரைவைத் தயாரித்ததை எதிர்த்து பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.

இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்வதற்கு முன், மாநில அரசு உச்ச நீதிமன்ற ஃபார்முலாவைப் பின்பற்றி, ஓபிசிகளின் அரசியல் பின்தங்கிய நிலை குறித்து ஆய்வு செய்ய ஒரு பிரத்யேக ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் மாநில அரசு விரைவான கணக்கெடுப்பை நடத்தியதாகவும், இது மும்முறை சோதனை சூத்திரத்தைப் போலவே சிறந்தது என்றும் அரசின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலுக்காக 17 மாநகராட்சி மேயர்கள், 200 நகராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 545 நகர் பஞ்சாயத்துகளின் தலைவர்களுக்கான இடஒதுக்கீடு இடங்களின் தற்காலிக பட்டியலை யோகி ஆதித்யநாத் அரசு இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டு ஏழு நாட்களுக்குள் ஆலோசனைகள், ஆட்சேபனைகளை கோரியது.

டிசம்பர் 5-ல் வெளியான அந்த வரைவின் படி, நான்கு மாநகராட்சி மேயர் இடங்கள் ஓபிசிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இதில், 2 மேயர் பதவிகள் ஓபிசி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. 200 நகர்மன்றங்களில் 54 தலைவர்களின் இடங்கள் ஓபிசிக்களுக்கு ஒதுக்கப்பட்டன, இதில் 18 இடங்கள் ஓபிசி பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது. 545 நகர் பஞ்சாயத்து தலைவர் பதவிகளில், 49 ஓபிசி பெண்களுக்கு உட்பட 147 இடங்கள் ஓபிசி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இது குறித்து பேசிய சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் சுனில் சிங் சஜன், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பறிக்கும் பாஜக அரசின் சதி இது” என்றார்.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், "உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஓபிசிகள் கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கிறோம். ஓபிசியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் தேர்தல் நடத்த மாட்டோம். தேவைப்பட்டால் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in