'நடக்க கால்கள் இருக்காது, பேச நாக்கு இருக்காது': பெண் அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த சசிகலா புஷ்பா மீது வழக்கு

'நடக்க கால்கள் இருக்காது, பேச நாக்கு இருக்காது': பெண் அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த  சசிகலா புஷ்பா  மீது வழக்கு

தமிழக அமைச்சர் கீதா ஜீவனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா மீது கொலைமிரட்டல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவில், அமைச்சர் கீதா ஜீவனுக்கு மிரட்டல் விடும் வகையில் பாஜக மாநிலத்துணைத்தலைவர் சசிகலா புஷ்பா பேசினார். அவ்விழாவில் சசிகலா புஷ்பா பேசுகையில், “தமிழகத்தின் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய கீதா ஜீவன், பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தேவையில்லாமல் பேசி வருகிறார். அண்ணாமலை படித்து மெரிட்டில் பாஸ் செய்து ஐபிஎஸ் அதிகாரியானவர். அவர் தவறு செய்த குற்றவாளிகளைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜராக்குவது தான் வழக்கம். உங்களை போல குற்றவாளியாக நீதிமன்றத்தில் நின்றது கிடையாது. எனவே, எங்கள் தலைவர் அண்ணாமலையை பற்றி பேச உங்களுக்கு தகுதி கிடையாது. எங்கள் தலைவர் ஒன்றும் உங்கள் தலைவர் போல் கிடையாது. அதனை மனதில் வைத்து பேசுங்கள். உங்கள் வேலைகளைப் பார்க்காமல் உங்கள் தவறுகளைச் சுட்டி காட்டும் எங்கள் தலைவர் அண்ணாமலையைத் தேவையில்லாமல் பேசினால். வெளியில் வர கால்கள் இருக்காது, பேச நாக்கு இருக்காது” என்று மிரட்டல் தொனியில் பேசினார்.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அவரது வீட்டு கதவு, ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகள், கார் கண்ணாடி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து சிப்காட் போலீஸில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக திமுக மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், இசக்கி ராஜா, திமுக பகுதிச் செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் பற்றி அவதூறாக பேசிய பாஜகவின் மாநிலத்துணைத்தலைவர் சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலைமிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in