அன்னூர் தொழிற்பூங்காவிற்காக விவசாயிகளின் அனுமதியில்லாமல் நிலம் எடுக்கப்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி

அன்னூர் தொழிற்பூங்காவிற்காக விவசாயிகளின் அனுமதியில்லாமல் நிலம் எடுக்கப்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி

அன்னூர் தொழிற்பூங்காவிற்காக விவசாயிகளின் அனுமதி இல்லாமல் கண்டிப்பாக அவர்களது நிலம் எடுக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கோவை ராஜவீதியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். திமுக பொருளாளரான டி.ஆர்.பாலு எம்.பி சிறப்புரையாற்றினார்.

அப்போது டி.ஆர்.பாலு பேசுகையில், " தலைவர் கலைஞர் அப்போதைய பொதுச்செயலாளர் பேராசிரியர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். பொதுச்செயலாளர் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளாரோ கலைஞர் அதே அன்பு தொண்டர்கள் மீதுவும் வைத்திருந்தார். கலைஞர் போலவே முதல்வர் ஸ்டாலினும் அன்பு வைத்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் 80 ஆண்டுகால பொதுச்சேவையில் இருந்துள்ளார். 40 ஆண்டுகாலம் பொதுச்செயலாளராக இருந்தவர். பேராசிரியர் துக்கத்தை வெளிகாட்ட கண்ணீர் விடமாட்டார். பேராசிரியரும், கலைஞரும் பாசமும் நேசமும் பொழிந்தவர்கள். இருவரது நட்பு 74 ஆண்டுகால நட்பு. தலைவர் ஸ்டாலினிடம் திமுகவை ஒப்படைக்க வேண்டும் என முதலில் சொன்னது பேராசிரியர் அன்பழகன் தான். அத்துடன் திமுகவை முதல்வர் ஸ்டாலின் வழிநடத்த வேண்டும் அதை நான் பார்க்க வேண்டும் என சொன்னார் பேராசிரியர்" என்று கூறினார்.

விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், " கோவை என்று சொன்னால் அது திமுகவின் கோட்டை. நகர்புறத்தின் உள்ளாட்சி தேர்தலின் வெற்றியை அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம். கலைஞரின் பிரதிபலிக்கும் விதமாக பேராசிரியர் அன்பழகன், பல்வேறு சாதனைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக கல்வித்துறையில் நிறைய செய்துள்ளார். கடந்த அதிமுகவின் ஆட்சியால் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமையை திமுக ஆட்சி சரி செய்துள்ளது. கோவையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 சதவீத சாலைப்பணிகள் நிறைவடைந்துள்ளது. விமான நிலையம் விரிவாக்கப்பணி 92 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் போடமுடியாத ரோட்டை திமுக ஆட்சியில் போட்டுள்ளோம்.

மயிலாடுதுறையில் மழை காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்ட போது 2600 மின் மாற்றிகள் 36 மணி நேரத்தில் முதல்வரின் வழிகாட்டுதலில் சீரமைக்கப்பட்டது. அன்னூர் தொழிற்பூங்காவிற்காக விவசாயிகளின் அனுமதி இல்லாமல் கண்டிப்பாக அவர்களது நிலம் எடுக்கப்படாது. சிலர் தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தனி நபர், விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் நிலம் எடுக்கப்படாது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in