சமூகச் சீர்திருத்த யாத்திரை: சாதிப்பாரா நிதிஷ் குமார்?

சமூகச் சீர்திருத்த யாத்திரை: சாதிப்பாரா நிதிஷ் குமார்?

தேர்தல் வரும்போதுதான் ஆட்சியாளர்களுக்கு மக்களுடைய கவனம் வரும். மகளிர், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகள் என்று பகுதி பகுதியாகப் பிரித்துப் பாசம் காட்டுவார்கள். ஆட்சியின் முதல் பகுதியிலேயே அக்கறை காட்டுகிறவர்கள் குறைவு. பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விதிவிலக்காக, தனது மாநில மக்களிடையே சமூகச் சீர்திருத்த யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். டிச.22 தொடங்கி ஜன.15-ல் பாட்னாவில் முடிக்கவிருக்கிறார். பூரண மதுவிலக்கு அமல், வரதட்சணை ஒழிப்பு, சிறார் திருமணம் தடுப்பு ஆகியவை அவருடைய யாத்திரையின் நோக்கங்கள்.

கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் மோதிஹாரியில் யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். 1917-ல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சம்பாரண் சத்தியாகிரகப் போராட்டத்தை மகாத்மா காந்தி மோதிஹாரியில்தான் தொடங்கினார். பிஹார் விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களில் அவுரியை மட்டும்தான் பயிரிட வேண்டும் என்று அன்றைய பிரிட்டிஷ் அரசு ஆணையிட்டது. சாயம் தயாரிக்க அவுரி தேவைப்பட்டதால், இங்கிலாந்து ஜவுளி ஆலைகளுக்காக இந்திய விளைநிலங்களைப் பயன்படுத்தியது பிரிட்டிஷ் அரசு. பிஹார் விவசாயிகளுக்காக காந்தி நடத்திய அந்தப் போராட்டம் வெற்றி பெற்றது. அவருடைய சத்தியாகிரக போராட்டம் மேலும் பல நாடுகளை அவர் மீது கவனம்கொள்ள வைத்தது. நிதிஷ் குமார் சமத்துவக் கொள்கையிலும் சமூக நீதியிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். காந்தியின் கொள்கைகளைக் கடைபிடிப்பவர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும், தனித்துவத்தை அவ்வப்போது காட்டிவருகிறார். இந்துத்துவா கொள்கைகளின் ஆதரவாளர் அல்ல.

நோக்கம் என்ன?

பிஹார் மாநிலத்தில் இப்போது சட்டம் ஒழுங்கு கெட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடி கட்டிப் பறக்கிறது. அரசு வேலைகளுக்கு ஒப்பந்தங்களைப் பெற ஊழல் நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் அதிகாரத் தரகர்களுடன் கூட்டுசேர்ந்து செயல்படுகின்றனர். வரதட்சணைக் கொடுமையும் அதிகரித்து வருகிறது. பூரண மதுவிலக்கு அமலில் இருப்பதாகக் கூறினாலும் மது ஆறாக ஓடுகிறது. கள்ளச் சாராயத்துக்கும் குறைவில்லை. எனவே, இம்மூன்றையும் களைய நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் மக்களுடைய ஒத்துழைப்புடன் அவற்றைத் தீவிரப்படுத்த இந்த யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார்.

இந்த யாத்திரையின்போது, பிஹாரின் ஒன்பது நிர்வாக மண்டலங்களிலும் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வார். ஆங்காங்கே மக்களிடம் பேசி அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பார். யாத்திரையில் இருந்தாலும் அன்றாடம் அரசு நிர்வாகத்தையும் முகாம் அலுவலகம் மூலம் கவனிப்பார். அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சமூக நலத் திட்டங்கள் எப்படி அமல் செய்யப்படுகின்றன என்று அனைத்து மண்டலங்களிலும் நேரடியாக ஆய்வு செய்வார். இந்நடவடிக்கை அரசு அதிகாரிகளைச் செயல்பட வைக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக பிஹாரைத் தொடர்ந்து ஆட்சி செய்யும் நிதிஷ் குமார் மிக எளிமையானவர், நேர்மையானவர், மக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்பவர். கூட்டணிக் கட்சியான பாஜகவினர், உத்தர பிரதேசம், ஹரியாணா பாணியில் பிஹாரிலும் திறந்தவெளியில் தொழுகை நடத்தக் கூடாது என்று முஸ்லிம்களை எச்சரித்தபோது, நிதிஷ் குமார் அதைக் கண்டித்தார். பிஹாரில் காலம்காலமாக இருந்துவரும் வழக்கத்தை நிறுத்தவேண்டிய அவசியம் என்ன, நாட்டின் நிர்வாகத்தைக் கவனிப்பதை விட்டுவிட்டு இவையெல்லாம் என்ன சிறுபிள்ளைத்தனமான விஷமங்கள் என்று கர்ஜித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும் பாஜகவின் தேசிய குடியுரிமைப் பதிவேடு, குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, அனைவருக்கும் பொது சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து போன்றவற்றை வெளிப்படையாக எதிர்த்து கருத்து தெரிவித்து வருகிறார். பிஹாரின் பின்தங்கிய நிலையைக் கருத்தில் கொண்டு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கையே வைத்திருக்கிறார்.

பிஹாரில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துறை கடந்த சில மாதங்களாக அரசு அலுவலகங்களிலும் அரசு அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனைகளை நடத்துகிறது. அரசு அதிகாரிகள் வருவாய்க்குப் பொருந்தாத வகையில் சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதும் வீடுகளில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணத்தைப் பதுக்கியிருப்பதும் பிடிபட்டு வருகின்றன. நூறு கோடிக்கும் மேற்பட்ட அசையாச் சொத்துகள் பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

2020-ம் ஆண்டில் பிஹாரில் 3,150 கொலைகள் நடந்துள்ளன. கொள்ளை, வழிப்பறி, வங்கிகளில் புகுந்து திருட்டு, சங்கிலிப் பறிப்பு ஆகியவை அதிகரித்து வருகின்றன. அவர் அறிவித்த பூரண மதுவிலக்குத் திட்டம் தோல்வியைத் தழுவுகிறது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களே பக்கத்து மாநிலங்களிலிருந்து மதுபானங்களைக் கடத்திவந்து விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். உள்ளூரிலும் சாராயம் காய்ச்சப்படுகிறது. மதுவிலக்கு திட்டத்தால் அரசுக்கு வருமானம்தான் குறைந்ததே தவிர, மது குடிப்பவர்கள் அதிகம் செலவழித்து குடிக்கிறார்கள் அல்லது கள்ளச் சாராயம் குடிக்கிறார்கள். பெண்களை அடித்து உதைப்பது போன்ற குற்றங்கள் குறையவில்லை. இதனால் மதுவிலக்கு ஆதரவாளர்களும் திருப்தியாக இல்லை, மது குடிப்பவர்களும் அதிருப்தியாக இருக்கின்றனர்.

2020 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு 74 தொகுதிகளும் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 தொகுதிகளும் கிடைத்தன. ஆட்சியமைக்க முடிந்தாலும் பாஜகவின் தயவில் ஆட்சி செய்ய வேண்டியிருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 75 தொகுதிகளில் வென்றது. ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு வெளியேறி தனித்துப் போட்டியிட்டு ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றிவாய்ப்பைத்தான் அதிகம் குறைத்தார். அதனால் நிதிஷின் அரசியல் செல்வாக்கு தேசிய அளவில் சரிந்திருக்கிறது.

பிஹார் முதலமைச்சர் நிதிஷுக்கு, பிரதமர் நரேந்திர மோடியுடன் அரசியல் ரீதியாக இன்னமும் போட்டி இருக்கிறது. மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று பாஜக தலைமை அறிவித்தபோது முதலில் கொந்தளித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தே வெளியேறியவர் நிதிஷ்தான். பிறகு, வேறு வழியில்லாமல் சமரசம் செய்துகொண்டு கூட்டணியில் நீடிக்கிறார். சிராக் பாஸ்வானை விட்டு ஐக்கிய ஜனதா தளத்தின் தொகுதிகளைக் குறைத்து உள்ளடி வேலைகளைச் செய்ததே பாஜக தலைமைதான் என்ற சந்தேகம், அக்கட்சியில் பலருக்கும் இருக்கிறது. இந்நிலையில் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் மம்தா, சரத்பவார், ராகுல் என்று எவரையும் பிரதமர் வேட்பாளராக ஏற்க இயலாமல் எதிர்க்கட்சிகள் திணறினால், அந்த இடத்தை நிரப்ப நிதிஷ் குமார் தயாராக இருப்பார்; இந்த யாத்திரை தனது செல்வாக்கையும் மதிப்பையும் உயர்த்திக்கொள்ளத்தான் என்று அவருடைய கட்சியைச் சேர்ந்த மூத்த சகாக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த யாத்திரை, 2022 ஜன.15-ல் முடிந்தாலும் சீர்திருத்த நடவடிக்கைகள் அதற்குப் பிறகும் தொடரும் என்று அறிவித்திருக்கிறார் நிதிஷ்.

Related Stories

No stories found.