‘இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்கவே மாட்டேன்’ - நிதிஷ்குமார் உறுதி

நிதீஷ் குமார்
நிதீஷ் குமார்

இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன், நாட்டின் முன்னேற்றத்திற்காக சமாஜ்வாதிகளுடன் இணைந்து செயல்படுவேன் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உறுதியளித்துள்ளார்.

பிஹார் மாநிலம் சமஸ்திபூரில் 75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பொறியியல் கல்லூரியை திறந்து வைத்து உரையாற்றிய நிதிஷ் குமார், “பாஜகவினர் முட்டாள்தனமாக பேசுகிறார்கள். நான் மகாகத்பந்தனில் இருந்து விலகி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2017ல் சேர்ந்தேன், ஆனால் இப்போது திரும்பி வந்துவிட்டேன். இப்போது எங்கள் கூட்டணிக்குள் பிளவு ஏற்படவேண்டும் என பாஜக விரும்புகிறது. தற்போது பாஜகவினர் என் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

1998ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரானார் என்பதை பாஜகவினர் மறந்துவிட்டார்கள். அப்போது அவர் என்னை மத்திய அமைச்சராக்கினார். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தனர். இன்று மத்திய அரசில் அமர்ந்திருப்பவர்களுக்கும் வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சமூகத்தில் மோதலை உருவாக்கவே இப்போது பாஜக செயல்படுகிறது

நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனி என் வாழ்நாளில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். நான் சமாஜ்வாதிகளுடன் (சோசலிஸ்டுகள்) இணைந்து பிஹாருடன் சேர்ந்து நாட்டை முன்னேற்றுவேன்” என்று கூறினார்.

முன்னதாக அக்டோபர் 11 ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதீஷ் குமாரைக் குறிவைத்து பேசினார். அப்போது, “ பீகார் மக்களை நான் கேட்கிறேன். ஜேபி இயக்கத்தின் மூலம் உயரங்களை எட்டிய தலைவர்கள் அதிகாரத்திற்காக இப்போது காங்கிரஸின் மடியில் அமர்ந்திருக்கிறார்கள்; நீங்கள் அவர்களுடன் இருக்கிறீர்களா?

இது ஜெய்பரகாஷ் நாராயண் காட்டிய பாதை அல்ல. அவர் அதிகாரத்திற்காக எதையும் செய்யவில்லை, வாழ்நாள் முழுவதும் கொள்கைகளுக்காக உழைத்தார். இன்று, அதிகாரத்திற்காக 5 முறை கூட்டணி மாறுபவர் பிஹாரின் முதல்வர்” என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது நிதிஷ்குமார் பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in