ராகுல் காந்தி, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியுடன் திடீர் சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக அணிதிரட்டும் நிதீஷ் குமார்!

ANI
ANI

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரை பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் சந்தித்துப் பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணியுடன் பிஹாரில் நிதீஷ் குமார் ஆட்சி அமைத்துள்ளார். பிஹாரில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம் பாஜகவிற்கு எதிராக இயங்கும் அரசியல் கட்சிகளுக்கு புத்துணர்வைக் கொடுத்துள்ளது. நிதீஷ் குமார் முடிவை ஆதரிக்கும் விதமாக பல்வேறு அரசியல் கட்சியினரும், அவரின் முடிவை வரவேற்றிருந்தார்கள்.

ஜனதாதளம் சார்பில் தேசிய நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தின் போது முதல்வர் நிதீஷ் குமார் 2024 மக்களவைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசி அவர்களை ஒன்றிணைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை கடந்த 31-ம் தேதி சந்தித்துப் பேசினார். பிஹார் மாநிலம் பாட்னாவில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்நிலையில் டெல்லியில் பிஹார் முதல்வர் நிதீஷ் குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். இதற்கு முன்பாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. நிதீஷ் குமாரின் அரசியல் பாஜவிற்கு நெருக்கடியைக் கொடுக்குமா என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in