எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி உருவாகிறதா? - மம்தா பானர்ஜியை சந்தித்தார் நிதிஷ்குமார்!

மம்தா பானர்ஜி நிதிஷ்குமார் தேஜஸ்வி
மம்தா பானர்ஜி நிதிஷ்குமார் தேஜஸ்விஎதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி உருவாகிறதா? - மம்தா பானர்ஜியை சந்தித்தார் நிதிஷ்குமார்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று மேற்கு வங்க மாநிலச் செயலகத்துக்குச் சென்று முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். பாஜகவுக்கு எதிராக பெரும் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் நோக்கத்தில் நிதிஷ் குமார் தலைவர்களை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் முன்னதாக சந்தித்துப் பேசினர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸின் கடுமையான விமர்சகர்களில் ஒருவரான டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவாலையும் நிதிஷ் குமார் சந்தித்துப் பேசினார், அவர் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும், நாடும் ஒன்றிணைந்து மத்தியில் ஆட்சியை மாற்றுவது "மிகவும் அவசியம்" என்று ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில்தான் கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை நிதிஷ் குமார் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது பீகார் துணை முதல்வரும், ஆர்ஜேடியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் உடன் இருந்தார். இதன் பின்னர் அவர்கள் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்திக்க லக்னோ செல்ல உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எஸ்பி ஆகிய இரு கட்சிகளும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதில் ஆர்வம் காட்டவில்லை.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் உட்பட, ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளின் சில கூட்டங்களில் கலந்து கொள்ளும் அகிலேஷ் யாதவ், காங்கிரஸை உள்ளடக்கிய ஒரு முன்னணியில் தனக்கு விருப்பமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். 2017 தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு அவர், காங்கிரஸோடு கைகோர்க்க விரும்பவில்லை. மம்தா பானர்ஜியும் காங்கிரஸைத் தாக்குவதில் இருந்து பின்வாங்கவில்லை, குறிப்பாக மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி திரிணமூல் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஒரு சட்டமன்ற இடத்தைப் பறித்தது, மம்தாவுக்கு இது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

ஆனால், லோக்சபா எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தியின் தகுதியிழப்பு சமீபத்தில் எதிர்க்கட்சிகளிடம் ஒரு அரிய ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நிதிஷ் குமாரின் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in