மணிப்பூரில் நிதிஷின் எம்எல்ஏக்களை கூண்டோடு தூக்கியது பாஜக: பிஹாருக்கும் சவால்!

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

மணிப்பூரில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆறு எம்எல்ஏக்களில் ஐந்து பேர் ஆளும் பாஜகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து, பிஹாரிலும் நிதிஷின் கட்சி வீழ்ச்சியடையும் என பாஜக எம்.பி சுஷில் மோடி சவால் விடுத்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் தொடர்பாக சுஷில் மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டில், "அருணாசல பிரதேசத்திற்குப் பிறகு மணிப்பூரிலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒன்றுமில்லாமல் போய்விட்டது. மிக விரைவில் லாலுஜி பிஹாரிலும் ஜேடியுவை இல்லாமல் ஆக்குவார்" என்று இந்தியில் பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள நிதிஷ் குமாரின் நெருங்கிய உதவியாளரும், ஜேடியு தேசியத் தலைவருமான ராஜீவ் ரஞ்சன் சிங், " பாஜக பகல் கனவு காண வேண்டாம். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அழிந்துவிடும். அருணாசல பிரதேசத்தில் பாஜக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை. எங்கள் கட்சியின் ஏழு எம்எல்ஏக்களும் அவர்களுடன் இணைத்தனர்.

அருணாசலத்திலும், மணிப்பூரிலும், பாஜகவை தோற்கடித்துதான் ஜேடியு அந்த இடங்களில் வென்றது என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 2024 ல் நாடு உங்களிடமிருந்து விடுபடும்....காத்திருங்கள்" என தெரிவித்தார்

பிஹாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு, மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆறு எம்எல்ஏக்களில் ஐந்து பேர் நேற்று ஆளும் பாஜகவில் இணைந்தனர். பாஜக பக்கம் தாவிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கு அதிகமாக இருந்ததால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது.

2020ம் ஆண்டில், அருணாசல பிரதேசத்தில் உள்ள ஏழு ஜேடியு சட்டமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் பாஜகவில் இணைந்தனர். மேலும் கடந்த வாரம் அருணாசலில் இருந்த ஒரே ஜேடியு எம்.எல்.ஏ-வும் பாஜகவுக்கு மாறினார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட ஜேடியு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in