பிஹாரிலிருந்து புறப்பட்டிருக்கும் ஒரு பிரியமான எதிரி!

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராகிறாரா நிதிஷ்?
பிஹாரிலிருந்து புறப்பட்டிருக்கும் ஒரு பிரியமான எதிரி!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை தங்களுக்கு எதிரிகளே இல்லை என்று இறுமாப்புடன் இருந்த பாஜகவுக்கு அவர்களின் கூட்டணிக்குள்ளிருந்தே ஒரு பிரியமான எதிரி முளைத்திருக்கிறார். திடீர் சூறாவளியாக புறப்பட்ட நிதிஷ் குமாரின் அதிரடி, பிஹார் அரசியலை மட்டுமல்ல, தேசிய அரசியலையே அதிரவைத்துள்ளது. ஒரே நாளில் கூட்டணியை மாற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட நிதிஷின் அடுத்த குறி பிரதமர் நாற்காலி தான் என்ற பேச்சும் இப்போது நாடெங்கும் பரபரக்கிறது.

முற்பகலில், பாஜகவுடனான கூட்டணி முறிவு என அறிவிக்கும் நிதிஷ் பிற்பகலில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். மாலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். ஒரே நாளில் பிஹார் ஆட்டத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் மாறியது. ஆனால், ஆட்ட நாயகன் நிதிஷ் மட்டும் மாறாமல் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவால் கவிழ்க்கப்படும் அரசுகளையே பார்த்து பழக்கப்பட்ட மக்கள், நிதிஷின் புது ட்விஸ்ட்டை சுவாரஸ்யமாகப் பார்க்கிறார்கள். கடந்த சில வாரங்களாகவே பேசுபொருளாக இருந்த ‘ஏக்நாத் ஷிண்டே’ மாடல் மறந்து போய், இப்போது ‘நிதிஷ் மாடல்’ பரபரப்பாகியிருக்கிறது.

நாங்கள் நினைத்தால் எதையும் மாற்றுவோம் என நினைத்த பாஜகவையே திகைக்க வைத்திருக்கிறது பிஹார் ஆட்சி மாற்றம். 2024 மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு குடைச்சல் கொடுக்கலாம் என கணிக்கும் எதிர்க்கட்சிகளை எல்லாம் கட்டம் கட்டி கவிழ்த்து வருகிறது பாஜக. ஆம் ஆத்மியின் சத்யேந்திர ஜெயின், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி - ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரசின் பார்த்தா சாட்டர்ஜி, சிவசேனாவின் சஞ்சய் ராவத் என அனைத்துக் கட்சி தலைகளையும் அமலாக்கத்துறையை வைத்து அடக்கிவருகிறது. இப்படியான சூழலில்தான் நிதிஷ்குமார் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக எழுந்து நிற்கிறார். பாஜகவுக்கே ஆட்டம்காட்டிய இவரது துணிச்சலைப் பார்த்துவிட்டு, 2024-ல் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் முன்னிறுத்தப்படலாம் என தலைநகரில் பேச்சுக்கள் அலையடிக்கத் தொடங்கிவிட்டன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, முதல்வர் பதவியேற்பு விழாவில் பேசிய நிதிஷ், “எதிர்காலம் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால் 2014-ல் பதவிக்கு வந்தவர் 2024-ல் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு புத்துயிரூட்டுவேன். எதிர்க்கட்சிகளே இருக்காது என்று சொன்னவர்கள். நிதிஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும். 2024-ல் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்” என சூளுரைத்தார். இவரின் இந்தப் பேச்சு மக்களவைத் தேர்தல் தொடர்பான அரசியல் அணி சேர்க்கை குறித்த யூகங்களை மேலும் அதிகமாக்கியுள்ளது.

பாஜகவுடன் மோதல் வெடித்தது ஏன்?

ஜனதா கட்சி காலத்திலிருந்தே பாஜக தலைவர்களான வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்களுடன் நல்ல நட்பில் இருந்தவர் நிதிஷ். அதன் காரணமாகவே, வாஜ்பாய் அரசில் பல முக்கிய இலாகாக்களுக்கு அமைச்சராக இருந்தார். இதனாலேயே 2005 முதல் 2014 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சுமூகமாகவும் இயங்கினார். ஆனாலும் இவருக்கு, மோடி - அமித்ஷா கூட்டணியை அறவே பிடிக்கவில்லை.

இதற்கு ஒரு ஃப்ளாஷ் பேக் உண்டு. பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும்கூட பிஹாரில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை நிதிஷ் தக்கவைத்துள்ளார். இதனால் பொது சிவில் சட்டம், பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் போன்றவற்றை கூட்டணியில் இருந்துகொண்டே எதிர்த்தார். குஜராத் கலவரம் காரணமாக மோடியிடமிருந்து நிதிஷ் விலகியே இருந்தார்.

இந்த நிலையில்தான் 2010 ஜூனில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் பிஹாரில் நடந்தது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி பிஹார் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தார். அதில், 2008-ல் பிஹார் வெள்ள நிவாரணமாக குஜராத் அரசு ரூ.5 கோடி வழங்கியதை பெரிய அளவில் விளம்பரப்படுத்தியிருந்தார். மோடி மற்றும் நிதிஷ் இணைந்து நிற்கும் படங்களும் பத்திரிகைகளை ஆக்கிர மித்திருந்தன. இது நிதிஷ்குமாரை கொதிநிலைக்குத் தள்ளியது.

மோடியுடன் தனது படங்கள் இடம்பெற்றதால் அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் தனக்கு கிடைக்காமல் போகலாம் என அஞ்சினார் நிதிஷ். இதனால், மோடி கொடுத்த வெள்ள நிவாரண நிதி ரூ.5 கோடியை வட்டியுடன் குஜராத்துக்கு திருப்பி அனுப்பினார் நிதிஷ் குமார். இதனால் அப்போதே கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. எனினும் பாஜக மூத்த தலைவர்களின் சமாதானத்தை அடுத்து கூட்டணியில் நீடித்தார் நிதிஷ். இந்த நிலையில் தனக்கு பிடிக்காத மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்றதும் 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு தனியாக களம்கண்டார் நிதிஷ்.

மோடிக்கு எதிராக 2015-ல் பிஹாரில் மகா கூட்டணியுடன் இணைந்து ஆட்சியை பிடித்த நிதிஷ், அந்தக் கூட்டணியிலும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2017-ல் மீண்டும் பாஜகவுடன் கைகோத்தார். ஆனாலும் பழைய நெருடல் காரணமாக மோடி - நிதிஷ் இடையே நல்லுறவு இல்லை. இதனால், நிதிஷ் மாற்றி மாற்றி கூட்டணி வைப்பார்... நம்பகத்தன்மையற்றவர் என்றெல்லாம் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பொதுவெளியில் பேசத் தொடங்கினார்கள். அப்படிப் பேசியவர்களை பாஜக தலைமை கண்டிக்கவில்லை. இந்த நிலையில், 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட இடங்களில் மட்டும் லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பஸ்வான் வேட்பாளர்களை நிறுத்தினார். தன்னை வீழ்த்த சிராக்கை பாஜகதான் தூண்டிவிடுவதாக நம்பினார் நிதிஷ். சிராக்கின் போட்டியால் நிதிஷ் கட்சி வெறும் 43 இடங்களில்தான் வென்றது. எனினும் அப்போது நிதிஷ் முதல்வராக நீடிக்க வேண்டா வெறுப்பாக ஆதரவளித்தது பாஜக.

மாநில அரசியலில் நிதிஷுக்கு ஆதரவளித்துக் கொண்டே அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஆர்.பி.சிங்கை அவருக்கு எதிராக கொம்பு சீவியது பாஜக. இதைப் புரிந்துகொண்டு அவரை லாகவமாக கட்சியிலிருந்து தூக்கி எறிந்தார் நிதிஷ். இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேயின் கிளர்ச்சிக்குப் பிறகு எங்கே தனது கட்சியையும் உடைத்து விடுவார்களோ என மிகவும் பயப்பட ஆரம்பித்தார் நிதிஷ். அந்த பயம்தான் பாஜகவை இத்தனை வேகமாக உதறித்தள்ள அவரை உந்தியது என்கிறார்கள்.

சிவசேனாவைப் போல் பாஜகவிடம் வீழ்ந்துவிடாமல் சுதாரித்துக் கொண்டு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட நிதிஷின் அரசியல் சாதூர்யத்தை தேசியவாத காங்கிரஸ் மட்டுமல்லாது சிவசேனாவும் பாராட்டி இருக்கிறது இங்கே கவனிக்கத்தக்கது.

பிரதமர் வேட்பாளரா நிதிஷ்?

இந்திய அரசியலில் ஊழல் கறைபடியாதவர் என்ற பெயரை இன்னமும் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் நிதிஷ்குமார். மிகவும் பின் தங்கிய மாநிலமான பிஹாரில் பெண் கல்வி, சமூக நீதி, வறுமை ஒழிப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, தேர்ந்த நிர்வாகி என்ற பெயரைச் சம்பாதித்தவர். அதனால் தான் பிரதமர் வேட்பாளருக்கான ரேஸில் 2014-லிருந்தே மோடிக்கு நிகராக நிதிஷின் பெயரும் அடிபட்டு வந்தது. 2019 தேர்தலில் நிதிஷ் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக வாய்ப்புள்ளது என பேசப்பட்டது. ஆனால், 2017-ல் பாஜக கூட்டணியில் நிதிஷ் இணைந்ததால் அந்தப் பேச்சுக்கள் நீர்த்துப் போனது.

தற்போதுள்ள சூழலில் காங்கிரஸால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியுமா என்பது சந்தேகமே. ஏனென்றால், ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற கட்சிகள் காங்கிரஸ் தலைமை ஏற்பதை அவ்வளவாய் விரும்பவில்லை. அதுபோல, பிரதமர் வேட்பாளர் கனவில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாவும் தனது கட்சியினர் மீதான அமலாக்கத்துறை அட்டாக்கால் ஆடிப்போயிருக்கிறார்.

இந்த நிலையில் மிஸ்டர் க்ளீன் இமேஜை தக்கவைத்திருக்கும் நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக அங்கீகரிக்க எதிர்க் கட்சிகள் அணி திரள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன!

பெட்டிச் செய்தி:

யார் இந்த நிதிஷ்குமார்?

1951-ல் பிறந்த நிதிஷ்குமார் ஜெயபிரகாஷ் நாராயணால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். தொடக்கத்தில் ஜனதா தளம் கட்சியில் இருந்த இவர், பின்னர் ஜார்ஜ் பெர்னாண்டஸுடன் இணைந்து 1994-ல் சமதா கட்சியை தொடங்கினார். பின்னர் 2003-ல் தனது கட்சியை ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைத்து அதன் தலைவரானார். 1990-ல் ஏப்ரல் முதல் நவம்பர் வரை வி.பி.சிங் அமைச்சரவையில் இவர் வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் வாஜ்பாய் அரசில் 1998 முதல் 2004 வரை ரயில்வே, தரைவழி போக்குவரத்து, வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்தார். ரயில்வேயில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் தத்கல் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியது இவர்தான்.

நிதிஷ் முதன் முதலாக 2000-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பிஹார் முதல்வராக பதவியேற்றார். ஆனால், ஒரே வாரத்தில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து 2005 முதல் இப்போது வரை நிதிஷ் தான் பிஹாரின் முதல்வராக இருந்து வருகிறார். இடையில் சில மாதங்கள் மட்டும் இவரது கட்சியை சேர்ந்த ஜிதன் ராம் மாஞ்சி முதல்வராக இருந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in