2024ல் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால்... நிதிஷ்குமார் கொடுத்த முக்கிய வாக்குறுதி!

நிதீஷ் குமார்
நிதீஷ் குமார்

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மத்தியில் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி அமைத்தால் நாட்டில் உள்ள அனைத்து பின்தங்கிய மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

2024 தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், “எங்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தால், பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம். நான் பிஹாரைப் பற்றி மட்டும் பேசவில்லை, சிறப்பு அந்தஸ்து பெற வேண்டிய பிற மாநிலங்களைப் பற்றியும் பேசுகிறேன்" என்று தெரிவித்தார்.

நிதிஷ்குமார் சமீபத்தில் டெல்லிக்குச் சென்று பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து அடுத்த பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிப் பேசினார். தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸின் ஆதரவுடன் பிஹாரில் கடந்த மாதம் பாஜகவின் கூட்டணியை முறித்தார் நிதிஷ். இவர் 2007 ம் ஆண்டு முதல் பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி வருகிறார்.

ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், மத்திய நிதியுதவி திட்டங்களுக்கான மத்திய-மாநில நிதி விகிதம் 90:10 ஆகும். இது மற்ற மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடு விகிதத்தை விட மிகவும் அதிகமானது. தற்போது, ​​நாட்டில் 11 சிறப்பு வகை மாநிலங்கள் உள்ளன. அருணாசல பிரதேசம், அசாம், இமாசல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் (இப்போது யூனியன் பிரதேசம்), மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை சிறப்பு அந்தஸ்து மாநிலங்கள்.

தனக்கு பிரதமர் பதவி ஆசை இல்லை என்று கூறியிருந்தாலும், பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கிய முழக்கமாக இந்த அறிவிப்பினை நிதிஷ்குமார் கையிலெடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in