உ.பி மக்களவை தேர்தலில் நிதிஷ் போட்டி: பாஜகவை எதிர்க்க சமாஜ்வாதியுடன் பேச்சுவார்த்தை

உ.பி மக்களவை தேர்தலில் நிதிஷ் போட்டி: பாஜகவை எதிர்க்க சமாஜ்வாதியுடன் பேச்சுவார்த்தை

பிஹாரில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய முதல்வர் நிதிஷ்குமார், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணியில் இணைந்தார். ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) தலைவரான அவர், பாஜகவைத் தோற்கடிக்க எதிர்கட்சிகளை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இத்துடன் நிதிஷ், மக்களவை தேர்தலில் பாஜகவை நேரடியாக உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்க முடிவு செய்துள்ளார். இம்முயற்சியில் ஒன்றாக உ.பியின் முக்கிய எதிர்கட்சியான அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதியுடன் கூட்டணி பேச்சை துவக்கி உள்ளார். டெல்லியின் குருகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிறுவனர் முலாயம்சிங் யாதவை இதற்காக சந்தித்து பேசியுள்ளார் நிதிஷ்.

பிஹாரை ஒட்டியுள்ள உ.பியின் கிழக்குப் பகுதியில் நிதிஷின் குர்மி சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இதனால், அப்பகுதியில் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைப்பதுடன், அங்குள்ள ஒரு தொகுதியில் தாம் போட்டியிடவும் தயாராகிறார் முதல்வர் நிதிஷ். இவருக்கு, பிரதமர் நரேந்திரமோடி பாணியில் வேற்று மாநிலத்திலிருந்து உ.பியில் போட்டியிடுவது திட்டமாக உள்ளது. நிதிஷுக்காக உ.பியின் பூல்பூர், மிர்சாபூர் மற்றும் அம்பேத்கர்நகர் ஆகிய தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜேடியுவின் உபி மாநிலத் தலைவர் அனுப்சிங் பட்டேல் கூறுகையில் ‘இந்த யோசனையை, பாட்னாவில் நடைபெற்ற எங்கள் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் முன் வைக்கப்பட்டது. இதை ஏற்கும் வகையில் அவர்  பேசியிருப்பதால், 2024 மக்களவைக்கு உ.பியில் பாஜகவை நேரடியாக நிதிஷ் எதிர்க்கும் வாய்ப்புகள் உள்ளன ’ எனத் தெரிவித்தார்.

உ.பியின் பூல்பூரில் முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் வி.பி.சிங் போட்டியிட்டு வென்றிருந்தனர். பூல்பூருடன் மிர்சாபூர் மற்றும் அம்பேத்கர்நகரிலும் குர்மி மற்றும் முஸ்லீம்கள் கணிசமாக உள்ளனர். இதனால், இந்த மூன்றில் ஒன்றில் நிதிஷ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உ.பியின் புந்தேல்கண்ட், மத்திய பகுதியிலும் சேர்த்து சுமார் 20 மக்களவை தொகுதிகளில் ஜேடியு வெல்லும் வாய்ப்புகள் கணிக்கப்பட்டுள்ளன. எனவே, சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்து பேட்டியிட ஜேடியு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

ஏற்கெனவே நிதிஷின் ஜேடியு, உ.பியின் 2017 சட்டப்பேரவை தேர்தலில் உ.பியில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. பிறகு காங்கிரஸுடன் சமாஜ்வாதி இணைந்தமையால் மதச்சார்பற்ற வாக்குகள் பிரியும் என போட்டியைக் கைவிட்டார் நிதிஷ். பிறகு பாஜகவுடன் இருந்தமையால் 2019 மக்களவைக்கு உ.பியில் பேட்டியிடாத நிதிஷ், 2022 சட்டப்பேரவைக்கு தனித்து போட்டியிட்டார். இதில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு 26-ல் வைப்புத்தொகையையும் ஜேடியு வேட்பாளர்கள் இழந்தது நினைவுகூரத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in