‘கட்சியின் தலைமையேற்க நிதிஷ்குமார் என்னிடம் கேட்டார்;நான் மறுத்துவிட்டேன்’ - புதிதாய் பற்றவைத்த பிரசாந்த் கிஷோர்

நிதிஷ் குமார் - பிரசாந்த் கிஷோர்
நிதிஷ் குமார் - பிரசாந்த் கிஷோர்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தலைமையேற்று நடத்தவேண்டும் என பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தன்னிடம் கேட்டதாகவும், ஆனால் தான் அதனை நிராகரித்து விட்டதாகவும் தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வியூகவாதியாக இருந்து அரசியல் கட்சி தொடங்கும் முனைப்பில் உள்ள பிரசாந்த் கிஷோர், பிஹார் மாநிலத்தின் 3,500 கிமீ தூரத்துக்கு 'ஜன் சுராஜ்' என்ற பொது விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் செய்து வருகிறார். பாட்னாவிலிருந்து 275 கிமீ தொலைவில் உள்ள மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நடைபயணத்தின் போது பேசிய பிரசாந்த் கிஷோர், “நிதிஷ் குமார் தனது நாற்காலியைப் பிடிக்க முடிந்தது. அதனால் அவர் மிகவும் புத்திசாலி என்று நினைக்கிறார். 2014 லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, அவர் உதவி கேட்டு என்னை டெல்லியில் சந்தித்தார். 2015 சட்டசபை தேர்தலில் 'மகாகத்பந்தன்' முதல்வர் வேட்பாளராக வெற்றிபெற அவருக்கு நான் உதவினேன். இன்று, அவரிடம் வழங்குவதற்கான ஞானம் எனக்கு உள்ளது” என்று கூறினார்.

முன்னதாக பிரசாந்த் கிஷோருக்கு பிஹார் அரசியலின் ஏ,பி,சி தெரியாது என்று நிதிஷ் குமார் தெரிவித்தது பரபரப்பை உருவாக்கியது. மேலும் பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்காக வேலை செய்யலாம் என்ற சந்தேகத்தையும் அவர் கிளப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய கிஷோர், “நான் ஒரு மருத்துவரின் மகன், நாடு முழுவதும் எனது திறமையை நிரூபித்த பிறகு எனது சொந்த மாநிலத்தில் வேலை செய்ய முயற்சிக்கிறேன். 10-15 நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமார் என்னை அவரது இல்லத்திற்கு அழைத்தார் என்பதை நீங்கள் அனைவரும் ஊடக அறிக்கைகள் மூலம் அறிந்திருக்க வேண்டும். அவர் தனது கட்சியை வழிநடத்தும்படி என்னிடம் கேட்டார். அது சாத்தியமில்லை என்று நான் கூறினேன்” என்று கூறினார்

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் 2018 ல் ஜேடியு கட்சியில் நிதிஷ் குமாரால் சேர்க்கப்பட்டார். அடுத்த சில வாரங்களில் அவர் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அதன்பின்னர் சில காரணங்களால் அவர் கட்சியிலிருந்து விலகினார்.

பிரசாந்த் கிஷோருக்கு பணம் எங்கிருந்து வருகிறது என ஜேடியு தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கிஷோர், “ எனக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை அறிய விரும்புபவர்கள், அவர்களைப் போல், நான் 'தலாலி' (தரகு வேலையில்) ஈடுபடவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அரசியல்வாதிகள் நீண்ட காலமாக என்னிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர். அரசியல் வியூகவாதி என்ற எனது சாதனையை ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. ஆனால் இதற்கு முன் நான் யாரிடமும் கடன் கேட்டதில்லை. ஆனால் இன்று நான் மக்களிடம் நன்கொடை கேட்கிறேன். நாங்கள் இங்கு போட்ட கூடாரம் போன்ற செலவுகளை உள்ளடக்கிய இந்த இயக்கத்தை கட்டமைக்க நான் வசூலிக்கும் கட்டணம் இதுதான்" என்று கூறியுள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in