‘இந்த தேசமே இவருக்கு கடன் பட்டிருக்கிறது..’

‘கறுப்பு நாளில்’ மன்மோகன்சிங்கை விதந்தோதிய நிதின்கட்காரி
‘இந்த தேசமே இவருக்கு கடன் பட்டிருக்கிறது..’

’இந்திய பொருளாதாரத்தின் கறுப்பு தினமாக’ பணமதிப்பிழப்பு நாளை தேசம் நினைவுகூர்ந்தபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை திறந்த மனதுடன் புகழ்ந்திருக்கிறார் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்காரி.

2016, நவ.9 நள்ளிரவில் இந்தியாவில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அதிரடியாய் அமலானது. கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் முகமாய், நடப்பிலிருந்து 500 மற்றும் 1000 ரூபாய் கரன்சிகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. பாஜக அரசின் மிகப்பெரும் சீர்திருத்த நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. இன்றைக்கும் பாஜக அபிமானிகளால்கூட ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அபத்தமான நடவடிக்கையாக அது அமைந்துபோனது.

இதனையொட்டி இந்திய பொருளாதாரத்தின் கறுப்பு தினமாக ஆண்டுதோறும் நவ.8 தினம் பொதுவெளியில் அனுசரிக்கப்படுகிறது. நேற்றும் இதை முன்னிட்டு சமூக ஊடகங்களில் பொதுமக்கள் தங்கள் வேதனை அனுபவங்களை பட்டியலிட்டனர். பணமதிப்பிழப்பு பிரகடனத்தை முன்னிட்டு பிரதமர் மோடி விடுத்த வாக்குறுதிகளை மீண்டும் சுற்றுக்கு விட்டனர். மோடியை கரித்துக்கொட்டிய கையோடு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை புகழவும் செய்தனர். நிதியமைச்சராகவும், பிரதமராகவும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அவரது பங்கினை சிலாகித்தனர்.

இந்த அதிர்வுகளுக்கு மத்தியில் அமைதி காத்த காவி முகாமில் இருந்து பாஜக மூத்த தலைவர் ஒருவர், மன்மோகன்சிங்கை அன்றைய தினம் விதந்தோதி பேசியது பலதரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவர் மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்காரி. 1991-ல் மன்மோகன்சிங் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளை புகழ்ந்து பேசிய நிதின் கட்காரி முத்தாய்ப்பாக ‘இந்த தேசமே மன்மோகன்சிங்குக்கு கடன்பட்டிருக்கிறது’ என்றார். 90களில் மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தபோது மன்மோகன்சிங் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தான் நெருக்கமாக கண்டுணர்ந்ததாகவும் கட்காரி மெச்சினார்.

நிதின் கட்காரி
நிதின் கட்காரி

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நிதின் கட்காரி காவி முகாமில் தனித்துவமானவர். மனதில் பட்டதை ஒளிக்காமல் பேசக்கூடியவர். கட்சி சகாக்களுக்கு சங்கடம் ஏற்படுமெனிலும் சரியானதை பொதுவெளியில் எடுத்துரைப்பவர். சமயங்களில் கட்சியின் கலகக்குரலோனாகவும் அடையாளம் காணப்பட்டவர். கட்சியின் தேசிய தலைவராக இவர் இருந்தபோதுதான்(2009-2013) குஜராத்திலிருந்து மோடி - அமித் ஷா ஆகியோர் டெல்லி அரசியலுக்கு வந்தனர். கனத்த இதயத்தோடு அவர்களுக்கு வழிவிட்டது தொடர்பாக நிதின்கட்காரியின் ஆதரவாளர்களுக்கு இன்றைக்கும் ஆதங்கம் உண்டு. அவ்வப்போது ’கட்சியில் நீடிக்கிறாரா அல்லது வெளியேற முனைகிறாரா என்று குழப்பும் வகையில் அறிக்கைகளையும் அதிரடி பேச்சுக்களை வெளியிடுவார்.

இந்த வகையில் தற்போதும் மன்மோகன்சிங்கை மனமுவந்து விதந்தோதி இருக்கிறார் நிதின்கட்காரி. ’டாக்ஸ் இண்டியா ஆன்லைன்’ விருதளிப்பு விழாவில் வாழ்நாள் சாதனையாளராக அறிவிப்பான மன்மோகன்சிங் குறித்து இப்படி அவர் பேசி உள்ளார். பணமதிப்பிழப்பு நினைவு நாளில் பொதுவெளியில் அதிகம் கொண்டாடப்பட்ட மன்மோகன்சிங்கை, பாஜக தலைவரான நிதின் கட்காரி மனம் திறந்தது பாராட்டியது கட்காரியின் தனித்துவமான இயல்பை உறுதி செய்திருக்கிறது. கூடவே கட்சி தலைமைக்கு அவர் வழக்கமாக விடுக்கும் சமிக்ஞையையும் வெளிப்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in