நீலகிரி: நகராட்சிகளை விட பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு அதிகம்

நீலகிரி: நகராட்சிகளை விட பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு அதிகம்
கூடலூர் தொரப்பள்ளி வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்

நீலகிரி மாவட்டத்தில் நகராட்சிகளை விட பேரூராட்சிகளில் கூடுதலாக வாக்குகள் பதிவாகி உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 108 பதவியிடங்கள், பேரூராட்சிகளில் 186 பதவியிடங்கள் என மொத்தம் 294 பதவியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் அதிகரட்டி, பிக்கட்டி மற்றும் கேத்தி பேரூராட்சிகளில் தலா ஒரு வேட்பாளர் வீதம் 3 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 291 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 291 பதவியிடங்களுக்கு மொத்தம் 1253 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் 1,55,380 ஆண் வாக்காளர்களும், 1,67,723 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் என மொத்தம் 3,23,111 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தேர்தலுக்கு 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 55 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு, அந்த வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் மற்றும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மெல்ல சூடுபிடித்தது.

ஓவேலி பேரூராட்சியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடியை தேர்தல் பார்வையாளர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார். உதகை காந்தலில் உள்ள பதற்றமான சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டத்தில் காலை 9 மணி வரையில் பேரூராட்சிகளில் 9.7 மற்றும் நகராட்சிகளில் 6.5 என 7.4 சதவீதம் வாக்குகள் பதிவாயின. காலை 11 மணி வரையில் பேரூராட்சிகளில் 22.42 மற்றும் நகராட்சிகளில் 19.70 என 20.87 சதவீதமும், மதியம் 1 மணி வரையில் பேரூராட்சிகளில் 39.93 மற்றும் நகராட்சிகளில் 33.42 என மொத்தம் 36.21 சதவீதமும், மதியம் 3 மணி வரையில் பேரூராட்சிகளில் 52.03 மற்றும் நகராட்சிகளில் 44.06 என மொத்தம் 47.48 சதவீதமும், மாலை 5 மணி வரையில் பேரூராட்சிகளில் 62.92 மற்றும் நகராட்சிகளில் 55.74 என மொத்தம் 58.82 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

உதகை புனித இருதய ஆண்டவர் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பெட்டியில் வைத்து சீல் வைத்த தேர்தல் அலுலர்கள்
உதகை புனித இருதய ஆண்டவர் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பெட்டியில் வைத்து சீல் வைத்த தேர்தல் அலுலர்கள்

ஆண் வாக்காளர்கள் வாக்குப்பதிவு அதிகம்

நீலகிரி மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களை விட ஆண் வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்தனர்.

பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 1,37,695 வாக்காளர்களில், 42,425 ஆண் வாக்காளர்கள், 44,219 பெண் வாக்காளர்களும் வாக்களித்தனர். ஆண்கள் 63.94 சதவீதமும், பெண்கள் 61.98 சதவீதமும் வாக்களித்தனர்.

நகராட்சிகளில் மொத்தமுள்ள 1,83,714 வாக்காளர்களில், ஆண் வாக்காளர்கள் 50,701 பேரும், பெண் வாக்காளர்கள் 51,692 பேரும் வாக்களித்தனர். ஆண் வாக்காளர்கள் 57.48 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 54.12 சதவீதமும் வாக்களித்தனர்.

அமைதியாக நடந்த வாக்குப்பதிவு

மாவட்டம் முழுவதும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக நடந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை பெட்டியில் சீல் வைத்து, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.