நீலகிரி மாவட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி செப்டம்பர் 1 முதல் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளனர்
நீலகிரியில் முக்கிய தொழிலாக உள்ள தேயிலை சாகுபடியில் சுமார் 85 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய கடந்த 2011-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசு அமைத்த சாமிநாதன் கமிஷனும் 1 கிலோ பசுந்தேயிலைக்கு ரூ.32.50 பைசா வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இதுவரை மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு இம்மாதம் ரூ.14 என்று தேயிலை வாரியம் விலை நிர்ணயித்துள்ளதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் குடும்பத்தினருடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக சிறு, குறு தேயிலை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.