பாஜக தலைவர் அண்ணாமலையை என்ஐஏ விசாரிக்க வேண்டும்: ஆய்வு நடத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பேட்டி

பாஜக தலைவர் அண்ணாமலையை என்ஐஏ  விசாரிக்க வேண்டும்: ஆய்வு நடத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பேட்டி

கோவை கார் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

கோவை உக்கம் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு காரில் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலியானார். இது தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சமீரன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்," நூல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தாத பாஜக, கோவை சம்பவத்திற்காக போராட்டம் நடத்துகிறது. கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் 12 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி தீபாவளி கொண்டாடினர். ஆனால், சிலர் குறுகிய மனப்பான்மையுடன் கோவை சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கின்றனர். கோவையில் ஏதோ பதற்றம் நிலவியது போல் சிலர் செய்தி வெளியிடுகின்றனர்.

மற்ற மாவட்டங்களை விட கோவை மாட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். கோவையில் மூன்று மணி நேரம் தொழில் முனைவோர்களை சந்தித்துப் பேசினார். கோவை சம்பவம் குறித்து மாநிலம் கடந்தும் விசாரணை தேவைப்படும் என்பதால் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்ற முதல்வர் உத்தரவிட்டார். ஆனால் கட்சியை வளர்ப்பதற்காக பாஜக இப்பிரச்சினையில் தரம் தாழ்ந்த அரசியலை நடத்தக்கூடாது. கோவையில் கார் வெடிகுண்டு வெடிக்கவில்லை. மக்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டாம். மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் தான் ஒரு மாநிலத்தில் கட்சியை வளர்க்க முடியும். பாஜக இதில் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடக்கூடாது.

கோவை சம்பவம் தொடர்பான புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது அதன் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன்? காவல்துறை அறிவிப்பதற்கு முன்பே பாஜக மாநில தலைவருக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தது எப்படி? எனவே, இதுகுறித்து என்ஐஏ முதலில் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in