கருக்கா வினோத்தை என்ஐஏ கையிலெடுப்பதன் நிஜப் பின்னணி என்ன?

ஆளுநர் மாளிகை வாசலில்  கருக்கா வினோத் பிடிபட்டபோது...
ஆளுநர் மாளிகை வாசலில் கருக்கா வினோத் பிடிபட்டபோது...

ஆளுநர் மாளிகை வாசலருகே பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் வழக்கை, தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ கையில் எடுத்திருக்கிறது. பயங்கரவாதிகள் உள்ளிட்ட படுமுக்கியமான வழக்கு விவகாரங்களை புலனாய்வு மேற்கொள்ளும் என்ஐஏ தலையிடும் அளவுக்கு, மெய்யாலுமே கருக்கா வினோத் வழக்கில் முகாந்திரங்கள் இருக்கிறதா அல்லது, தமிழக அரசுடனான தொடரும் மோதலில் ஆளுநர் தரப்பின் அடுத்தக்கட்ட அஸ்திரமா... என்பது உட்பட பல்வேறு கேள்விகள் இதன் பின்னணியில் எழுந்திருக்கின்றன.

கருக்கா எனும் ‘நானும் ரவுடிதான்’

தேனாம்பேட்டை எஸ்.எம்.காலனியை சேர்ந்த கருக்கா வினோத் மீது கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்துமே வடிவேலு நையாண்டி பாணியிலான ’நானும் ரவுடிதான்...’ ரகம் மட்டுமே. அடிதடி முதல் பெட்ரோல் குண்டு வீச்சு வரை சரித்திர பதிவேட்டில் வினோத் பெயர் இருந்தபோதும், ரவுடிகளின் பட்டியலில் ’சி’ என்ற கடைசி பிரிவில்தான் அவரை சேர்த்திருக்கிறார்கள்.

ஆனால், டாஸ்மாக் மீது தாக்குதல், தேனாம்பேட்டை காவல்நிலையம் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு, பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ஆகியவை கருக்கா வினோத்தை பொதுவெளியில் கவனிக்கத்தக்க நபராக மாற்றியது. காவல்நிலையம் மீது தாக்குதல் என்றளவுக்கு வினோத் தீவிரம் கொள்ளும்போதே, காவல்துறை தரப்பில் முறையாக கவனித்து அவர் மீதான வழக்குகளை முடுக்கிவிட்டு சிறையில் முடக்கி இருக்கலாம். அந்த அசிரத்தையின் விளைவு, ஆளுநர் மாளிகை வாசல் வரை பெட்ரோல் குண்டாக வெடிக்க வாய்ப்பானது.

கருக்கா வினோத்
கருக்கா வினோத்

அக்.25 அன்று 4 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களுடன் ஆளுநர் மாளிகை வாசலை நெருங்கிய கருக்கா வினோத், அவற்றில் இரண்டை வீசியதில் கைதாகி இருக்கிறார். ’நீட் மசோதா’ முதல், தனக்கான ’பிணை இழுபறியானது வரை’ ஆளுநர் மீதான ஆத்திரத்தில் அவ்வாறு செய்ததாக கருக்கா வினோத் சொன்னார். இருப்பினும் இவையெல்லாம் போலீஸாரின் முழு விசாரணையில் மட்டுமே வெளிப்பட வாய்ப்பாகும்.

ஆளுநர் - திமுக அரசு முற்றும் மோதல்

திமுகவினர் குறிப்பிடுவதுபோல, அதிமுக, பாஜகவைவிட அரசை விமர்சிப்பதில் ஆளுநர் முன் வரிசையில் நிற்கிறார். அதன் பலனாய் திமுக அரசாலும், திமுகவினராலும் அவர் மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ”தமிழ்நாட்டின் ஆளுநர் பாஜக கட்சியை சேர்ந்தவர் போல மாறியிருக்கிறார். ஆளுநர் மாளிகையும் பாஜகவின் அலுவலகமாக மாறியிருக்கிறது. இது வெட்கக்கேடானது” என்று சீறினார்.

பரமபதம் விளையாட்டு போல, சர்ச்சைகள் ஒவ்வொன்றிலும் தமிழக ஆட்சியாளர்களும், ஆளுநரும் மாறிமாறி எழுந்தும், வீழ்ந்தும் வருகின்றனர். இவற்றில் கருக்கா வினோத்தின் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் ஆளுநர் மாளிகை பக்கமாக காற்று அடித்திருக்கிறது. மாநில ஆளுநருக்கு எதிராக அவரது மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்ற வலுவான குற்றச்சாட்டுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் வழி செய்திருக்கிறது.

தமிழக ஆளுநர் - முதல்வர்
தமிழக ஆளுநர் - முதல்வர்

இந்த விஷயத்தில் ராஜ்பவன் தரப்பிலிருந்து வெளியான குற்றச்சாட்டு அறிக்கைகள், மேலும் சர்ச்சையைக் கூட்டின. ஆளுநர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஒவ்வொரு அம்சங்களாக அலசி சென்னை பெருநகர போலீஸார், பிக் பாஸ் பாணியில் குறும்படம் காட்டி விளக்கம் அளிக்க வேண்டியதானது. கருக்கா வினோத்தை குண்டர் சட்டத்தின் கீழும் முடக்கியது. ஆனபோதும், உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பியதாக சொல்லப்படும் அறிக்கையின் அடிப்படையில், தற்போது இந்த வழக்கின் உள்ளே என்ஐஏ வந்திருக்கிறது.

“திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மேற்கொள்ளும் விஷமப் பிரச்சாரமே, இப்படியான பெட்ரோல் குண்டாக வெடித்திருக்கிறது” என ஆளுநர் தரப்பிலான ஆதங்கம் அதிகரித்திருக்கிறது. கேரளா மற்றும் பஞ்சாப் பாணியில் தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட, அதற்கு பதிலடியாக பெட்ரோல் குண்டு விவகாரத்தை ஆளுநர் தரப்பில் தீவிரமாக கையிலேந்த வசதியானது.

என்ஐஏ ஏன்?

சிறையிலிருந்த கருக்கா வினோத்தை ஜாமீனில் வெளியே எடுத்தது யார், மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு, கமலாலயம் முதல் ஆளுநர் மாளிகை வரை பெட்ரோல் குண்டுகளை வீசும் அளவுக்கு சாதாரண ரவுடிக்கு துணிச்சல் வந்தது எப்படி... என்பதான கேள்விகளின் பின்னணியில் கருக்கா வினோத் வழக்கை என்ஐஏ கையில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

கருக்கா வினோத்தை பிணையில் எடுத்த வழக்கறிஞர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது ஜூனியர்களின் கட்சி பின்னணியை முன்வைத்து பாஜக - திமுக இடையே அரசியல் மோதல் எழுந்தது. “வழக்கறிஞர் - வழக்காடி என்பதற்குமேல், எங்களுக்கும் கருக்கா வினோத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என முத்தமிழ்ச்செல்வன் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தபிறகும் அந்த குற்றச்சாட்டுகள் அடங்கியபாடில்லை.

என்ஐஏ விசாரணை
என்ஐஏ விசாரணை

சிறையிலிருந்து கருக்கா வினோத் வெளியேறும் வீடியோ பதிவு ஒன்றில், அதே போன்று பிணையில் விடுதலையான பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுடன் அவர் தென்பட்டது அடுத்த சர்ச்சையை கிளப்பியது. சிறையில் கருக்கா வினோத் - பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா தரப்பினர் இடையேயான தொடர்புக்கு வாய்ப்பே இல்லை என்றும், ஒன்றாக வெளியேறியது எதேச்சையானது என்றும் போலீஸார் விளக்கமளித்த பிறகும் அது புகைந்து கொண்டே இருக்கிறது.

மாநிலத்தின் முதல் குடிமகனுக்கு எதிரான தாக்குதல் யோசனை கருக்கா சிந்தனையில் உதித்தது எப்படி, அவரை இயக்குவது யார் என்ற கேள்விகள் தமிழக காவல்துறைக்கும் மிச்சமிருக்கின்றன. நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர் மீதான தாக்குலுக்கு எதிரான சிறப்பு பிரிவான ஐபிசி 124 என்பதன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் தரப்பும் இதன் அடிப்படையிலேயே வலியுறுத்தியது.

இவற்றின் மத்தியிலான என்ஐஏ விசாரணையில் புதிய உண்மைகள் வெளிவருகிறதோ இல்லையோ, ஆளுநர் - திமுக அரசு இடையிலான மோதல் முதல், மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் வரை இந்த விவகாரம் தொடர்ந்து வெடிக்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in