
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் மதுரையில் இருவர் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் பல்வேறு மாவட்டங்களில் திடீர் சோதனை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று மதுரையில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள காஜிமார் தெருவில் வசிக்கும் முஹம்மது தாஜுத்தீன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகாலையிலேயே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முகமது தாஜுதீன் இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்களுடன் இவர் தொடர்பில் இருந்தாரா? என்ற கோணத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முஹம்மது தாஜுத்தீன் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முஹம்மது தாஜுத்தீன் மாதக்கணக்கில் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த சோதனை நடைபெறுவதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மதுரையின் மிக முக்கிய வீதியான காஜிமார் தெரு முழுவதும் காவல்துறை மற்றும் என்.ஐ.ஏ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சோதனையில் ஈடுபட்டு வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் மதுரை மாநகர போலீஸாரும் உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!