திராவிட மாடலும் ‘மனம் குளிருது தினம் தினமும்’

ட்ரெண்டிங்கில் தெறிக்க விடும் ’#தலைநிமிர்ந்த_தமிழகம்’
திராவிட மாடலும் ‘மனம் குளிருது தினம் தினமும்’

சமூக ஊடக தளமான ட்விட்டரின் ட்ரெண்டிங் வாசகங்கள் வழக்கமாக ஆங்கிலத்தில் இடம்பெறும். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிக்கான வாசகங்களும் தங்கிலீஷ் பாணியிலே இடம்பெறும்.

மாறாக, ட்ரெண்டிங்கில் தமிழ் தலைகாட்டுகிறது என்றாலே அது திமுகவினராகத்தான் இருக்கும் என்று அடித்து சொல்லலாம். அந்த வகையில் இன்று காலை முதலே ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ’தலைநிமிர்ந்த தமிழகம்’ என்ற தலைப்பில் பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளாகிறது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் நலத்திட்டங்கள், மாநிலம் கண்டடையும் அடைவுகள் ஆகியவை அவ்வப்போது ட்விட்டர் பதிவுகளில் எட்டிப்பார்ப்பதுண்டு. அந்த வரிசையில் தற்போது மகளிர் நலன் நாடும் அரசாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்தான சிலாகிப்பு ட்விட்டரில் பரப்பப்பட்டு வருகிறது.

நகரப் பேருந்துகளில் மகளிர் மற்றும் திருநங்கையருக்கான இலவச பயணம், உள்ளாட்சிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் கூடுதல் அதிகாரம், அரசு பள்ளி மாணவிக்கு ரூ.1000 உதவித்தொகை உள்ளிட்ட மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற திட்டங்கள் இந்த சிலாகிப்பில் இடம்பெற்றுள்ளன.

#தலைநிமிர்ந்த_தமிழகம் என ட்ரெண்டிங் செய்யப்படும் பதிவுகளை திமுகவினர் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக திமுகவின் மகளிர் ஆளுமைகள் கூடுதல் வாசகங்களோடு அவற்றில் கவனம் ஈர்த்து வருகின்றனர். ’பெண்ணை உயர்த்தும் பேராற்றல், திராவிட மாடல்’ என கனிமொழி எம்.பி பதிவிட, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ‘வன்மை உயர்வு மாந்தர் நலமெல்லாம், பெண்மையினால் உண்டு. நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வையுடன், "ஞாலத்தில் நம் பெண்கள் உயர்ந்திட நம் முதல்வர் நல்லாட்சி" என்று பதிவிட்டுள்ளார். இந்த வரிசையில் திமுக ஐடி விங் மட்டுமன்றி, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆட்சியில் அங்கம் வகிப்போர் ஆகியோரும் சேர்ந்துள்ளனர்.

இந்திய அளவில் ட்ரெண்டிங் அலையை வரையறுக்கும் ’ஹேஷ்டேக்’ பட்டியலில் ’#தலைநிமிர்ந்த_தமிழகம்’ என்பதும் முன்னேறி வருகிறது. இதனால் உற்சாகமடைந்து உடன்பிறப்புகள், தீயாக ட்விட்டரில் களமாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in