அனுமதியின்றி சாவர்க்கர் பெயரில் புதிய தெரு: நகராட்சி எடுத்த அதிரடி ஆக்ஷன்
கோவில்பட்டியில் நகராட்சி அனுமதியின்றி ஆர்எஸ்எஸ் தலைவர் வீர சாவர்க்கர்பெயர் சூட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள், அனுமதி பெறாமல் எழுதப்பட்டதெரு பெயரை அழித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டில் பாஜகவைச் சேர்ந்த விஜயகுமார் நகர்மன்ற உறுப்பினராக உள்ளார். இந்த வார்டில் எட்டயபுரம் சாலையில் மது விலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் அருகே ஏராளமான வீடுகள் உள்ளன. திடீரென அந்த தெருவில் தொடக்கத்தில் உள்ள சுவரில் 'கோவில்பட்டி நகராட்சி, வீர சாவர்க்கர்தெரு' என்று புதிய பெயர் நேற்று எழுதப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து, அந்த சுவரில் எழுதப்பட்டிருந்த வீரசாவர்க்கர் என்ற அந்தப் பெயரை அழித்தனர். நகராட்சியில் முறையான அனுமதி பெறாமல் சிலர் தாங்களாகவே தெருவிற்கு பெயர் சூட்டியதால், அதை அழித்ததாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்து மகாசபா அமைப்பினர் இந்த பெயரை எழுதியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," நகராட்சி அனுமதி இல்லாமல் பெயர் எழுதியுள்ளனர். தற்போது வரை நகராட்சி அலுவலகத்தில் இருந்து புகார் வரவில்லை. அப்படி வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர் .