கோடநாடு வழக்கில் திருப்பம்: ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணன் பரபரப்பு!

ஜெயலலிதா
ஜெயலலிதா

கோடநாடு கொலை, கொள்ளை குறித்து புதிய தகவல்களை வெளியிடுவேன் என ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணன் தெரிவித்துள்ளார். 

தனபால்
தனபால்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ். இவரை ஜெயலலிதாவின் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் தேடி வந்த நிலையில் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே நேரத்தில் கனகராஜ் அழைத்து வந்த கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் 10 பேரை போலீஸார் கைது செய்தனர். 

இந்த தொடர் விசாரணையில் கனகராஜின் அண்ணன் தனபாலையும் போலீஸார்  கைது செய்தனர். இவர் கனகராஜின் செல்போனில் இருந்த ஆவணங்கள், அவர் யாரிடம்  பேசியுள்ளார் என்பது உள்ளிட்ட தகவல்களை தீ வைத்து எரித்து அழித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

கோடநாடு பங்களா
கோடநாடு பங்களா

இதனிடையே  கடந்த மாதம் நிலம் வாங்கி கொடுப்பதில் மோசடியில் ஈடுபட்டதாக மேச்சேரி போலீஸார் அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்திருந்தனர். கடந்த வாரம் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து சிறை அதிகாரிகள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் ஆஞ்சியோ சிகிச்சை வேண்டாம் என அவர் மறுத்துவிட்டார். அதனால் அவரை சேலம் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். 

நேற்று மாலை மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனால் ஆஞ்சியோ சிகிச்சை செய்து கொள்கிறேன் என அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி டீனிடம் பேசி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, கோடநாடு கொலை, கொள்ளை பற்றிய பல தகவல்களை தெரிவிக்க இருப்பதாகவும், தனது இரண்டு மகள்களை முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய தகவல்களை வெளியிடுவேன் என்று அவர் கூறியுள்ளதை அடுத்து கோடநாடு கொலை வழக்கை விசாரித்து வரும் போலீஸார் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால், இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in