சென்னையில் புதிய விமான நிலையம் எங்கே அமைப்பது?: மத்திய அமைச்சருடன் தங்கம் தென்னரசு ஆலோசனை

சென்னையில் புதிய விமான நிலையம் எங்கே அமைப்பது?: மத்திய அமைச்சருடன் தங்கம் தென்னரசு ஆலோசனை

சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தினார்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நாள் ஒன்றிற்கு சுமார் 250 விமானங்கள் வந்து செல்கின்றன. ஓராண்டுக் காலத்தில் சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். விமான நிலையத்தை விரிவுபடுத்தச் சுற்றுவட்டார பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சென்னைக்கு அருகிலேயே புதிய விமான நிலையம் அமைக்க ஆய்வு செய்யும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதன் பிறகு தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நான்கு இடங்களைத் தேர்வு செய்து இந்திய விமான ஆணையத்திற்கு அனுப்பி இருந்தோம். இதை ஆய்வு செய்த அதிகாரிகள் சென்னைக்கு தெற்கே இருக்கக் கூடிய இரண்டு இடங்களில் விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்றதாக இருக்காது எனத் தெரிவித்திருந்தார்கள். மேலும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பண்ணூர் மற்றும் பரந்தூர் ஆகிய பகுதிகளில் விமான நிலையம் அமைப்பதற்கு சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். அந்த இடங்களில் விமான நிலையம் அமைவதற்காக முன்மொழிவு தயார் செய்வதற்காக அமைச்சர்கள் கூடி விவாதித்திருக்கிறோம்.

சென்னையைத் தவிர்த்து தமிழகத்தில் உள்ள மற்ற விமான நிலையங்கள் விரிவாக்கம் மற்றும் அதற்காக நில எடுப்புப் பணிகள் குறித்தும் விவாதித்தோம். கரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜோதிமணி எம்.பி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இதையும் நாங்கள் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி இருக்கிறோம் ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in