
ரயில்வே வேலை வாய்ப்பு முறைகேடு வழக்கில் நேற்று அமலாக்கத்துறை ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் மகள்களின் வீடுகளில் சோதனை நடத்தியது. இதனைக் கண்டித்துள்ள லாலு பிரசாத் யாதவ், ஆதாரமற்ற பழிவாங்கும் வழக்குகள் மூலம் தனது மகள், பேத்திகள் மற்றும் கர்ப்பிணி மருமகளை துன்புறுத்துவதாக பாஜகவை குற்றம்சாட்டினார்.
ரயில்வே வேலைவாய்ப்பு நில முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோரிடம் சிபிஐ சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடத்தியது. இந்த நிலையில் அமலாக்கத்துறை நேற்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவின் மகள்கள் ராகினி யாதவ், சந்தா யாதவ் மற்றும் ஹேமா யாதவ் மற்றும் ஆர்ஜேடி எம்எல்ஏ அபு டோஜானா ஆகியோருடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், "எமர்ஜென்சியின் இருண்ட கட்டத்தையும் நாங்கள் பார்த்தோம். அந்தப் போரில் நாங்களும் போராடினோம். இன்று எனது மகள்கள், சிறிய பேத்திகள், கர்ப்பிணி மருமகள் ஆகியோரை ஆதாரமற்ற பழிவாங்கும் வழக்குகளில் 15 மணி நேரம் பாஜக அமலாக்கத்துறை உட்கார வைத்துள்ளது. பாஜக எங்களுடன் ஒரு அரசியல் போரை நடத்துவதற்கு இவ்வளவு கீழ்நிலையை கடைபிடிக்குமா?.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக கருத்தியல் போராட்டம் தொடரும். நான் அவர்கள் முன் ஒருபோதும் பணிந்ததில்லை, எனது குடும்பம் மற்றும் கட்சியைச் சேர்ந்த யாரும் உங்கள் அரசியலுக்கு முன்னால் தலைவணங்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் வேலை வாய்ப்புக்காக குறைந்த விலையில் நிலங்களை வாங்கியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.