நேருவின் நட்பு வட்டம்... இன்று - 8

மதிப்பிழந்து நிற்கும் மருங்காபுரி பொன்னுசாமி!
ஜெயலலிதாவுடன் பொன்னுசாமி.
ஜெயலலிதாவுடன் பொன்னுசாமி.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி, ஏ.புதுப்பட்டி கிராமம், நவலக்குடியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றியதால் இவரை ‘பேராசிரியர் பொன்னுசாமி’ என்று தான் பெரும்பாலும் அழைப்பார்கள். ஆரம்பத்திலிருந்தே அதிமுக மீது அபிமானம் கொண்டவர். எம்ஜிஆர் காலத்திலேயே மருங்காபுரி தொகுதிக்கு சீட் கேட்ட இவருக்கு அப்போது அந்த வாய்ப்புக் கிட்டவில்லை.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1989-ல் நடந்த தேர்தலில் ஜெ அணி சார்பில் போட்டியிட்டார். அப்போது இந்தத் தொகுதியில் வேட்பாளர் ஒருவர் இறந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவின் வேட்பாளர் செங்குட்டுவனை பின்னுக்குத் தள்ளி 55,297 வாக்குகள் பெற்று மருங்காபுரிக்கு எம்எல்ஏ ஆனார் பொன்னுசாமி.

பொன்னுசாமியின் மாமனார் துரைராஜ் பிள்ளை அந்த பகுதியில் மிகவும் பிரபலமானவர். உள்ளாட்சிப் பிரதிநிதியாகவும் இருந்தவர் என்பதால் அவருக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கும், நன்கு படித்தவர் என்ற அபிப்ராயமும், வெள்ளாளர் சமூகத்தின் வாக்குகளும் பேராசிரியர் பொன்னுசாமியை மருங்காபுரி தொகுதியில் வெற்றிபெற வைத்தது.

திமுக ஆட்சிக்கு கலைக்கப்பட்டு 1991-ல் மீண்டும் சட்டசபை தேர்தல் வந்தபோதும் மருங்காபுரியில் பொன்னுசாமியையே வேட்பாளராக நிறுத்தினார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் அதிமுக வென்றதை அடுத்து சட்டப் பேரவை துணைத் தலைவராக பொன்னுசாமியை தேர்ந்தெடுத்தார் ஜெயலலிதா. பிறகு, கல்வி அமைச்சராகவும் அவரை அங்கீகரித்தார்.

அதிகாரத்தில் இருந்த சமயத்தில் ஜெயலலிதா பெயரில் பொறியியல் கல்லூரி, கல்வியில் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளை திருச்சி - மணப்பாறை சாலையில் தொடங்கினார் பொன்னுசாமி. அதன் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டார். அடுத்து வந்த திமுக ஆட்சியில் இவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பாய்வதற்கு இதெல்லாமும் காரணமாக அமைந்தன. இந்த வழக்கை சரியானபடிக்கு கையாளத் தவறியதால் உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டியும் பேராசிரியரால் தப்பிக்க முடியவில்லை. மூன்றாண்டுகள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்தார்.

ஆனால், சிறைசென்று திரும்பிய இவரை அதிமுக அவ்வளவாய் கண்டுகொள்ளவில்லை. இதனால் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுடன் சென்று தேமுதிகவில் இணைந்தார் பொன்னுசாமி. அங்கேயும் உரிய மரியாதை கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தவரை திமுகவுக்கு அழைத்துவரும் முயற்சியில் இறங்கினார் கே.என்.நேரு

மருங்காபுரி, மணப்பாறை பகுதிகளில் பொன்னுசாமிக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு திமுகவுக்கு பயன்படும் என்பது நேருவின் கணக்கு. இதுபற்றி திமுக தலைவர் கருணாநிதியிடம் பேசி பொன்னுசாமியை திமுகவில் சேர்க்க சம்மதமும் வாங்கினார். நேருவின் செயலாற்றல் பற்றி நன்கு தெரிந்திருந்ததால் இவரை நம்பிப் போனால் தனக்கான மரியாதையும் அரசியல் ஏதிர்காலமும் சிறக்கும் என்ற நம்பிக்கையில் திமுகவில் சேர சம்மதித்தார் பொன்னுசாமி.

சுமார் 2 ஆயிரம் பேருடன் திமுகவில் இணைந்த பொன்னுசாமிக்கு தீர்மானக்குழு உறுப்பினர் பதவி கொடுத்தது திமுக. முன்னாள் அமைச்சரான தனக்கு இன்னும் மரியாதை கொடுக்கும் திமுக என நினைத்தார் பொன்னுசாமி. இந்தநிலையில், தொகுதி மறு சீரமைப்பில் மருங்காபுரி தொகுதி மணப்பாறை தொகுதியாக மாறியது. இதன் பிறகு மணப்பாறை தொகுதியை மையம் கொண்டு செயலாற்றினார் பொன்னுசாமி.

பொன்னுசாமி
பொன்னுசாமி

தொகுதிக்குள் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தனிப்பட்ட முறையில் பழகினார். கோயில் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், திருமணங்கள் என எதுவாக இருந்தாலும் பொன்னுசாமி தாராளம் காட்டினார். இதனால் திமுகவுக்குள் அவரின் தனிப்பட்ட செல்வாக்கு உயர்ந்துகொண்டே போனது. திருச்சி மாவட்டத்தில் இந்தப் பேராசிரியருக்கும் தனித்த மரியாதையும், அபிமானமும் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டது. ஆனால், இது கட்சியில் இருந்த சிலருக்குப் பிடிக்காமல் போனது. பேராசிரியரின் இந்த வளர்ச்சி எதிர்காலத்தில் தங்களுக்கு ஆபத்தாக மாறக்கூடும் என அந்த சிலர் அரசியல் கணக்குப் போட்டார்கள்.

2011 சட்டப் பேரவைத் தேர்தல் வந்தது. அப்போது மணப்பாறை தொகுதியை மருங்காபுரி பொன்னுசாமிக்குத்தான் கொடுப்பார்கள் என திமுகவில் மட்டுமல்லாது கட்சிக்கு வெளியிலும் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், அதிமுகவில் அமைச்சராக இருந்தவர் என்பதால், திமுக ஆட்சியமைத்தால் பொன்னுசாமியும் அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பார் என்று நினைத்தவர்கள், அவருக்கு சீட்டு வழங்காமல் தடுப்பதற்கான அனைத்து உபாயங்களையும் கையாண்டார்கள். விளைவாக, தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தரப்பட்டது.

இதனால் கொதித்துப்போன பொன்னுசாமியின் ஆதரவாளர்கள் பொன்னுசாமியை சுயேச்சையாக போட்டியிட தூண்டினார்கள். அதற்கு தலைவணங்கி அவரும் போட்டியிட்டார். வெற்றிவாய்ப்பு பொன்னுசாமிக்கே பிரகாசம் என்று பேசப்பட்ட நிலையில், அதைத் தகர்க்க திமுகவிலேயே சிலர் அதிமுகவுக்கு ஆதரவாக வேலை பார்த்ததாக அப்போது பேச்சு உண்டு. ஆனாலும் 52,721 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தை பிடித்து தனது செல்வாக்கை நிரூபித்தார் பொன்னுசாமி. திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சோமு மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டார். அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் வெற்றிபெற்றார்.

இந்தத் தேர்தல் கொடுத்த அனுபவத்தால், அதிமுகவை விட்டு வந்தது மிகப்பெரும் தவறு என்பதை உணர்ந்தார் பொன்னுசாமி. அங்கிருந்திருந்தால் ஒரு மரியாதையாவது இருந்திருக்கும்... திமுகவுக்கு வந்து அதுவுமில்லாமல் போய்விட்டதே என்று மனவேதனைக்கு ஆளானார். அதிலிருந்து அரசியலில் பெரிய ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கியே இருந்தவரை, 2014 மக்களவைத் தேர்தலின்போது மீண்டும் அதிமுகவுக்கு கொண்டு வந்தார் தம்பிதுரை. கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதி வருகிறது. பொன்னுசாமியை அதிமுகவுக்குள் கொண்டு வந்தால் அது தனது வெற்றிக்கு கைகொடுக்கும் என கணக்குப் போட்டார் தம்பிதுரை. ஆனால், திமுகவுக்குச் சென்றுவிட்டு வந்தவர் என்பதாலோ என்னவோ பொன்னுசாமிக்கு ஜெயலலிதாவிடம் பழைய மரியாதை கிடைக்கவில்லை. மீண்டும் அதிமுகவுக்கு வந்தவரை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு கட்சிப் பதவி ஏதும் வழங்கப்படாததால் அரசியலில் மதிப்பிழந்து போனார் மருங்காபுரி பொன்னுசாமி.

இப்போது அரசியல் ஈடுபாடுகள் எதுவும் இல்லாமல் ஒதுங்கி நிற்கிறார் பேராசிரியர் பொன்னுசாமி. கல்வி நிறுவனங்கள் அவரின் கையை விட்டுப் போய்விட்டன. திமுகவுக்கு அழைத்தவர்கள் தன்னைக் காப்பாற்றுவார்கள், உரிய வழிகாட்டுவார்கள் என்று நம்பினார் பொன்னுசாமி. ஆனால், அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கிறார் இப்போது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in