'தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே `நீட்'- ஆளுநர் முன்பு முழங்கிய அமைச்சர் பொன்முடி

'தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே `நீட்'- ஆளுநர் முன்பு முழங்கிய அமைச்சர் பொன்முடி

“தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாநில உரிமையிலேயே கல்வி இருக்க வேண்டும்“ என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுகவினருக்கும் தமிழக ஆளுநருக்குமிடையே தொடரும் மோதல், பல்கலைக் கழக விழாக்களில் தொடர்ந்து எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. திமுகவினர் தொடர்ந்து மத்திய அரசை மேடையிலேயே விமர்சித்து வருவதால் ஆளுநர் அப்செட் ஆகியிருக்கிறார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதனால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை. 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட படிப்பிற்குச் சேர்க்கை நடைபெறவேண்டும். கல்வி மாநில உரிமையிலேயே இருக்க வேண்டும் என்பதை ஆளுநருக்குக் கோரிக்கையாக விடுக்கின்றோம்” என்றார்.

அடுத்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழக மக்களால் முதலமைச்சராக ஆக்கப்பட்டுள்ள நான் அனைத்து மாணவச் செல்வங்களையும் முதல்வனாக்க உருவாக்கிய திட்டம்தான் நான் முதல்வன் திட்டம். அனைத்து இளைஞர்களும் செயலிலும், சிந்தனையிலும் சிறந்தவர்களாக மாற்றவே இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். ‘வேலை இருக்கிறது. ஆனால் அதற்குத் தகுதியான இளைஞர்கள் கிடைக்கவில்லை’ எனப் பல்வேறு நிறுவனங்களில் இருந்தும் அரசிற்குக் கோரிக்கை எழுகிறது. இளைஞர்களுக்கு அனைத்துத் தகுதிகளையும் உருவாக்க வேண்டியது இந்த அரசின் கடமையாக இருக்கிறது'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in