நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முதல்வர் வலியுறுத்தல்

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முதல்வர் வலியுறுத்தல்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அமைச்சர்கள் ரகுபதி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு ரிமோட் மூலம் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை காணொளி காட்சிகள் மூலம் திறந்து வைத்தனர்.

இதன் பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், “உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 160 மாவட்ட மற்றும் 60 கீழ்மை நீதிமன்றங்களை, ஒரே கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய ஏதுவாக 315 கோடி செலவில் பல்லடக்கு மாடி கொண்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பழைய நீதிமன்ற கட்டிடத்தினை பாரம்பரியம் மாறாமல் புதுப்பிக்க 23 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய, பதிவு செய்யப்பட்ட 1,000 இளம் வழக்கறிஞர்களுக்கு ஊக்கத் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. 4 லட்சம் ரூபாய், இறந்த வழக்கறிஞர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை கடைப்பிடிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். உச்சநீதிமன்ற கிளை சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் கொண்டு வர வேண்டும் என்பதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சரிடம் கோரிக்கையாக முன்வைக்கிறேன்” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in