நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கால்  அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும்  வாக்குமூலம் கொடுத்தனர். இதையடுத்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரயிலில் கொண்டுசெல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பணம்
ரயிலில் கொண்டுசெல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பணம்

நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்க  சம்மன் அனுப்பப்பட்டது. இந்தநிலையில், நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  ‘வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், அவரின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை  விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பான விசாரணை இன்று நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு நிராகரிக்கப்படுமா, நெல்லை தொகுதி தேர்தல் நிறுத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பாஜகவேட்பாளர் நயினார் நாகேந்திரன் தரப்பினர் அச்சத்தில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in