கூடுதல் அவகாசம் தர முடியாது... திமுக கோரிக்கை நிராகரிப்பு: ஈபிஎஸ் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் விறுவிறுப்பு

கூடுதல் அவகாசம் தர முடியாது... திமுக கோரிக்கை நிராகரிப்பு: ஈபிஎஸ் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் விறுவிறுப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தொடரப்பட்ட நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கை ஆகஸ்டு 2-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2011-2016 வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கி ஆதாயம் அடைந்ததாக எடப்பாடி பழனிசாமி மீது புகார் எழுந்தது. இதனால் 4,833 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கிடப்பிலிருந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு இன்று விசாரணையைத் தொடங்கியது. திமுக சார்பில் வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ். பாரதி தற்போது அரசு வழக்கறிஞராக மாறியுள்ளார். இதையடுத்து வழக்கின் வக்காலத்து நாமாவை மாற்றி அமைக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக ஆர்.எஸ்.பாரதி தரப்பினர் கால அவகாசம் கோரினர். ‘இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்யக் கோரியதைத் தமிழக அரசு எங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவது எங்களுக்குத் தெரியவில்லை. இதனால் வழக்கை எதிர் கொள்வதற்கு நாங்கள் ஆயத்தமடையவில்லை’ என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்தனர். ஆர்.எஸ். பாரதி தரப்பில் 3 வாரகாலம் அவகாசம் கேட்ட நிலையில், ‘அவ்வளவு கால அவகாசம் கொடுக்க முடியாது. ஆகஸ்ட் 2-ம் தேதி நிச்சயம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்‘ என நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். நீதிபதியின் வேகம் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்குக் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in