ராகுல் காந்தி நாட்டிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: ஸ்மிரிதி இரானி கோபம்

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானிராகுல் காந்தி நாட்டிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: ஸ்மிரிதி இரானி கோபம்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அன்னிய மண்ணில் தேசத்தை இழிவுபடுத்தினார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடுமையாக சாடியுள்ளார். இந்தியாவிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்

டெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்மிருதி இரானி, "ராகுல் காந்தி வெளிநாட்டு மண்ணில் தேசத்தை அவமதித்தார். உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை அவர் அவமதித்தார். இந்தியாவை அவமானப்படுத்துவதுதான் ஜனநாயகமா?. அவைத் தலைவரை அவமதிப்பதுதான் ஜனநாயகமா?. இந்தியாவிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.

காங்கிரஸ்காரர்களை காகிதங்களைக் கிழிக்கவும், மக்களவையில் சபாநாயகர் நாற்காலியின் மீது வீசவும் காந்தி குடும்பத்தினர் ஏவுகிறார்களா என்று ராகுல் காந்தியிடம் நான் கேள்வி எழுப்புகிறேன். அதுவா ஜனநாயகம்?. நாடாளுமன்றத்திற்கு வந்து இந்தியாவுக்கு எதிரான ஜனநாயக விரோதப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, ராகுல்காந்தி வராமல் இருக்க முற்படுகிறார்" என்று கூறினார்.

மேலும், “பிரதமர் மீதான ராகுல் காந்தியின் வெறுப்பு இப்போது தேசத்தின் மீதான வெறுப்பாக மாறியுள்ளது. இந்தியாவை அடிமைப்படுத்திய வரலாற்றைக் கொண்ட ஒரு நாட்டிற்குச் சென்று அந்நிய சக்திகளைத் தூண்டினார். இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளை கிழித்தெறியும் அதே வேளையில், வெளிநாட்டு சக்திகள் ஏன் வந்து இந்தியாவைத் தாக்குவதில்லை என்று வருத்தம் தெரிவித்தார்” என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சமீபத்தில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையில் பேசுகையில், "இந்திய ஜனநாயகம் அழுத்தம் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். செய்திகளில் அதிகம் வந்துள்ளது. இந்தியாவில் ஜனநாயகமான நாடாளுமன்றம், சுதந்திரமான பத்திரிகை, நீதித்துறை போன்ற நிறுவனக் கட்டமைப்புகள் இப்போது தடைபடுகிறது. எனவே, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான தாக்குதலை நாங்கள் எதிர்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in