‘மோடியும் அமித்ஷாவும் தான் என்னை கட்சியில் சேர்த்தனர்’ - 6 முறை குஜராத் பாஜக எம்எல்ஏவாக இருந்தவர் போர்க்கொடி!

‘மோடியும் அமித்ஷாவும் தான் என்னை கட்சியில் சேர்த்தனர்’ -  6 முறை குஜராத் பாஜக எம்எல்ஏவாக இருந்தவர் போர்க்கொடி!

குஜராத்தின் வகோடியா தொகுதியில் இருந்து பாஜக சார்பில் 6 முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற மதுபாய் ஸ்ரீவஸ்தவுக்கு இந்தமுறை கட்சி வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் அவர் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

2002 குஜராத் கலவர வழக்கில் ஒருமுறை பெயரிடப்பட்ட உள்ளூர் "பாகுபலி" என அழைக்கப்படும் ஸ்ரீவஸ்தவ், " குஜராத்தில் எல்லாவற்றையும் டெல்லியின் உயர்மட்டத் தலைமை முடிவு செய்கிறது என்பதால், முதல்வர் பூபேந்திர படேல் தேர்தல் டிக்கெட்டைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. எனவே நான் பூபேந்திர படேலிடம் பேசவில்லை, நான் ஏன் அதை செய்ய வேண்டும்?. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுடன் எனக்கு நேரடி தொடர்பு உள்ளது. ஆனால் டிக்கெட் மறுக்கப்பட்ட பிறகு நான் அவர்களுடன் பேசவில்லை” என்று கூறினார்.

கடந்த சில நாட்களாக மாநில அமைச்சர் ஹர்ஷ் சங்கவியை சந்திக்க மறுத்த ஆறு கிளர்ச்சியாளர்களில் ஸ்ரீவஸ்தவ்வும் ஒருவர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீவஸ்தவ் 1995-ல் சுயேச்சையாக வெற்றி பெற்ற பிறகு பாஜகவில் சேர்ந்தார். அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் காங்கிரஸ், ஜனதா தளம் மற்றும் பிற கட்சிகளிலும் உள்ளனர்.

இது குறித்து பேசிய அவர், “நான் சுயமாக பாஜகவுக்கு வரவில்லை. 1995-ல் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, ​​நரேந்திர மோடியும், அமித் ஷாவும் என்னை பாஜகவில் சேருமாறு கோரிக்கை விடுத்தனர். அதனால்தான் நான் கட்சியில் இணைந்தேன், ”என்று கூறினார். நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் அந்த நேரத்தில் குஜராத் மாநிலத்தில் பாஜக நிர்வாகியாக இருந்தனர்.

தொடர்ந்து பேசிய ஸ்ரீவஸ்தவ், “ எனக்கு பதிலாக சீட் வாங்கியுள்ள வதோதரா மாவட்ட பாஜக தலைவர் அஷ்வின் படேல் இதுவரை ஒரு உள்ளாட்சித் தேர்தலில் கூட வெற்றி பெற்றதில்லை. பாஜக மீது நான் மிகவும் வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கிறேன். நான் எல்லா பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டேன்”என்று கூறினார்.

ஸ்ரீவஸ்தவின் இந்த கருத்துக்கு பாஜக இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. குஜராத்தில் மொத்தம் உள்ள 282 இடங்களில் பாஜகவின் 160 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலில் 5 அமைச்சர்கள் மற்றும் சட்டசபை சபாநாயகர் உட்பட 38 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் பல சிட்டிங் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in